இந்தித் திணிப்பை எதிர்த்து இன்று (அக்டோபர் 15) திமுக இளைஞரணியும், மாணவரணியும் சேர்ந்து தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்.
சென்னையில் நடந்த போராட்டத்தில் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவரணிச் செயலாளர் சிவி.எம்.பி.எழிலரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின். “மீண்டும் நீங்கள் இந்தித் திணிப்பை கையிலெடுத்தீர்கள் என்றால் டெல்லிக்கே வந்து போராட்டம் நடத்துவோம்” என்று பேசியிருக்கிறார்.
‘ஆனால் முதலில் இந்த ஆர்ப்பாட்டத்தையே முதலில் டெல்லியில் நடத்துவதாகத்தான் ஏற்பாடாகியிருக்கிறது. அதன் பிறகுதான் தமிழகத்துக்கு மாற்றியிருக்கிறார்கள். இதன் பின்னணி பற்றி மாணவரணி, இளைஞரணியினரிடம் பேசினோம்.
“அமித் ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் பரிந்துரைகளில் இந்தித் திணிப்பு இடம்பெற்றிருப்பதை அறிந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கடுமையான எச்சரிக்கையோடு ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அத்தோடு மாணவரணிச் செயலாளர் எழிலரசனை அழைத்து இதை எதிர்த்து நாம் வலிமையான போராட்டம் நடத்த வேண்டும், உடனே உதயாவிடம் இதுகுறித்து ஆலோசித்து நடத்துங்கள் என்று கூறியிருக்கிறார்.
உடனடியாக எழிலரசன் இதுகுறித்து ஓர் அறிக்கையை தயார் செய்து, இந்தி எதிர்ப்புப் போராட்டமே டெல்லியில்தான் நடைபெறும் என்றும் அறிவிப்பை அதில் இடம்பெறச் செய்தார்.
அந்த அறிவிப்பை உதயநிதிக்கு அனுப்பி வைத்தார்.
அப்போது உதயநிதி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பியுடன் ஆக்ரா அருகே முலாயம் சிங் யாதவ்வின் சொந்த கிராமத்தில் இருந்தார்.
மறைந்த முலாயம் சிங் யாதவ்வின் இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக அங்கே சென்றிருந்தார் உதயநிதி.
எழிலரசனின் அறிக்கையைப் படித்துப் பார்த்த உதயநிதி, “என்னங்க டெல்லியில போராட்டம்னு எழுதிட்டீங்க. நானே இப்ப டெல்லி பக்கத்துலதான் இருக்கேன்.
இப்படியே நான் டெல்லிக்கு வந்துரட்டுமா?” என்று கேட்டுவிட்டு, ‘தலைவரிடம் அனுமதி கேட்டு டெல்லியா தமிழ்நாடானு முடிவு செஞ்சுப்போம்” என்று சொல்லியிருக்கிறார்.
அதன்படியே திமுக தலைவரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. டெல்லியில் நடத்தினால் ஆயிரம் பேர் என்ற அளவில்தான் கலந்துகொள்ள முடியும். ஆனால் தமிழகம் முழுதும் பலமாக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார் ஸ்டாலின்.
அதன் பிறகு தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு எதிரில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தலாமா என்று ஆலோசிக்கப்பட்டது.
சென்னையில் சாஸ்திரி பவன் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என்று இடங்களை கூட பட்டியலிட ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால், ‘ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கென அரசே சில குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கியிருக்கிறது.
ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவே அதை மீறினால் எதிர்க்கட்சிகள் தங்களுக்கு விருப்பமான இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்பார்கள்.
அது சிக்கலாகிவிடும் என்பதால் வழக்கமான இடங்களிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.
முதன்முதலில் இந்த ஆர்ப்பாட்டத்தை டெல்லியில் நடத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டதை மனதில் வைத்துதான்… உதயநிதி தன் பேச்சின் போது அடுத்து டெல்லியில் போராட்டம் நடத்துவோம் என்று குறிப்பிட்டார்” என்கிறார்கள்.
-ஆரா
எடப்பாடியுடன் சி.வி.சண்முகம் சென்ற விவகாரம்: கே.பி.முனுசாமி பதில்!