சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் இன்று (ஜனவரி 21) லட்சக்கணக்க்கான திமுகவினர் பங்கேற்கும் இளைஞரணி 2 ஆவது மாநில மாநாட்டில் மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
இளைஞரணிச் செயலாளர் அமைச்சர் உதயநிதி தலைமையில் கூடிய மாநாட்டில் திமுக அரசின் நலத்திட்டங்களை வரிசைப்படுத்தி அவற்றுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்து பல தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. மேலும் திமுகவின் அடிப்படைக் கொள்கையும், இம்மாநாட்டின் மைய முழக்கமும் ஆன மாநில உரிமைகள் பற்றிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த 25 தீர்மானங்களில் ஆளுநர் பதவியை அகற்றிடுக, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவந்திடுக, முதல்வரே பல்கலைக் கழக வேந்தர், நீட் தேர்வு ஒழிப்பு போராட்டம் தொடரும் உள்ளிட்ட முக்கியத் தீர்மானங்களும் இடம்பெற்றுள்ளன.
ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்றிடுக
17 ஆவது தீர்மானமாக, “ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்றிடுக”என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதில், “மக்களாட்சியின் மாண்பு என்பது ஜனநாயகப் பூர்வமான தேர்தல் களத்தில் வாக்காளர்களாகிய மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றத்தின் சுயாட்சிமிக்கச் செயல்பாடுகளேயாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, குறிப்பாக, பா.ஜ.க. ஆட்சியில்லாத மாநில அரசுகளை, நியமனப் பதவியான ஆளுநர் பதவியைக் கொண்டு செயல்படவிடாமல் தடுக்க முயற்சித்து, ஆளுநர்களைக் கொண்டு இணை அரசாங்கம் நடத்துவதற்குத் திட்டமிடும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோதப் போக்கினைக் கண்டிப்பதுடன், ஆளுநர் பதவி என்ற `தொங்கு சதை’யை நிரந்தரமாக அகற்றுவதே, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான தீர்வு என இம்மாநாடு தீர்மானிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ.க.தான்
மேலும், ‘இந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ.க.தான் என்பதை அம்பலப்படுத்துவோம்’ என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதில், “10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சமையல் சிலிண்டர் விலை, பெட்ரோல்-டீசல் விலை ஆகியவற்றைக் கடுமையாக உயர்த்தி, மக்களை வாட்டி வதைப்பதும், அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வதாரத்தைப் பாதிக்கச் செய்ததுமே வேதனை மிகுந்த சாதனைகளாக இருக்கின்றன. ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காகும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், ஏழை-எளிய மக்களை நடுஇரவில் நடுரோட்டில் நிறுத்திய ஒன்றிய பா.ஜக. அரசு, கறுப்புப் பணத்தையும் ஒழிக்கவில்லை, கறுப்புப் பணத்தை ஒழித்து, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 இலட்ச ரூபாய் போடுவதாகக்கூறி, சல்லிப் பைசாவையும் போடவில்லை. தனது வாக்குறுதிகள் அனைத்திலும் தோல்வியடைந்த பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, மக்களுக்குச் செய்த துரோகங்களை மறைக்க, மதவாத அரசியலை முன்னெடுத்து, அயோத்தி இராமர் கோவிலை வைத்து வாக்குகள் பெற்றுவிடலாம் என நினைப்பது ஆன்மிகவாதிகளையும் ஏமாற்றும் செயலாகும். நாட்டில் உள்ள இந்துக்களில் பெரும்பான்மையான மக்களை 10 ஆண்டுகாலமாக ஏமாற்றிவிட்டு, இராமர் கோவிலைக் காட்டி, இந்துக்கள் ஓட்டுகளை வாங்கிவிடலாம் என அரசியல் கணக்குடன், கடவுளையும் ஏமாற்ற நினைக்கும் இந்து மக்களின் உண்மையான எதிரியான பா.ஜ.க.வின் மதவாத அரசியலை வீடு வீடாக அம்பலப்படுத்தும் பரப்புரையை இளைஞர் அணி மேற்கொள்ளும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம்தான்
மேலும், “பா.ஜ.க ஆட்சியை வீழ்த்திடும் முன்கள வீரர்களாக இளைஞர் அணி செயல்படும்!” என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
25 ஆவது இறுதித் தீர்மானமாக, “சமூக நீதி- மத நல்லிணக்கம்-சமத்துவம்-மாநிலங்களின் உரிமைகள்-தாய்மொழி வளர்ச்சி, பரவலான பொருளாதாரக் கட்டமைப்பு, மனித உரிமை இவற்றைக் கொள்கைகளாகக் கொண்ட இயக்கங்களின் ஒருங்கிணைப்பான ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்குவதிலும், வழிகாட்டுவதிலும் முன்னணி பங்காற்றி வருபவரும், மனிதநேய சக்திகளை ஒன்றிணைத்தால், பாசிசத்தை வீழ்த்திக் காட்ட முடியும் என 2019 நாடாளுமன்றத் தேர்தலிலேயே தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நிரூபித்துக் காட்டியவருமான திராவிட மாடல் முதலமைச்சர்-கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில், இயங்கும் கழக இளைஞர் அணி, கழகத் தலைவரின் கட்டளைக்கேற்ப 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் முன்னின்று செயலாற்றி, தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, ‘ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம்தான்’ என்ற வரலாற்று மரபின் தொடர்ச்சியை நிரூபிக்கும் வகையில், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டும் எனச் சூளுரைக்கிறது” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
–வேந்தன்
அரிச்சல் முனையில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு!
கொடியேற்றத்துடன் தொடங்கியது திமுக இளைஞரணி மாநாடு!