அரசியல் பேசினோம்: ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு ரஜினி

அரசியல்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று (ஆகஸ்ட் 8) காலை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து பீஸ்ட் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக ரஜினி டெல்லி சென்றார். அப்போது ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் சந்தித்தார். தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை சென்னை திரும்பினார்.

இந்நிலையில், டெல்லி சென்று வந்த கையோடு நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று சந்தித்தார். TN 06 – 9297 ஆகிய பதிவெண் கொண்ட காரில் சென்ற அவர், ஆளுநரைச் சந்தித்துப் பேசினார். சுமார் 25 நிமிடங்கள் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.

ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாகச் சந்திக்கிறார் ரஜினி. குறிப்பாக டெல்லி சென்று வந்த பிறகு இந்த சந்திப்பு நடைபெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினி கூறுகையில், “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. 25 முதல் 30 நிமிடம் வரை பேசினோம். காஷ்மீரிலிருந்து பிறந்து வட இந்தியாவிலிருந்து வந்துள்ளார். தமிழகத்தை அவர் மிகவும் நேசிக்கிறார். தமிழக மக்களின் கடின உழைப்பு மற்றும் நேர்மை ஆகியவை அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இங்குள்ள ஆன்மீக உணர்வு அவரை மிகவும் ஈர்த்திருக்கிறது. தமிழகத்தின் நன்மைக்காக எது செய்வதற்கும் தயாராக இருப்பதாக ஆளுநர் தெரிவித்தார். அரசியலைப் பற்றியும் விவாதித்தோம். அதைப் பகிர்ந்துகொள்ள முடியாது. மீண்டும் நான் அரசியலுக்கு வருவதற்கான திட்டம் எதுவும் இல்லை” என்று கூறினார்.

பால் உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறித்த கேள்விக்கு ரஜினி பதிலளிக்கவில்லை.
பிரியா

ஆளுநர் ஆர்.என். ரவி- நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!

+1
0
+1
4
+1
0
+1
1
+1
0
+1
1
+1
2

Leave a Reply

Your email address will not be published.