ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பன்னீர்செல்வம் இன்று புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கும் நிலையில் இதுவரை அதிமுக, பாஜக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இதுவரை வேட்பாளரை அறிவிப்பதில் தயக்கம் நிலவுகிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது.
அதற்காக அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்டு வருகின்றனர்.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலும் அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் வேட்பாளரை களமிறக்க திட்டமிட்டுள்ள அதே வேளையில் பாஜக போட்டியிட்டால் நாங்கள் விட்டுகொடுத்து ஆதரவு தருவோம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இடைத்தேர்தலில் ஆதரவு கேட்ட எடப்பாடி தரப்பை நிராகரித்து பாஜக முடிவுக்கே கட்டுப்படுவேன் என நேற்று தெரிவித்த புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகத்தை சென்னை தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் ஓ.பன்னீர் செல்வம் இன்று சந்தித்தார்.

பின்னர் இருவரும் கூட்டாக சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில்,
”இன்றைக்கு இந்தியாவை வல்லரசாக ஆக்கிக்காட்டுகின்ற தீவிர முயற்சியில் பிரதமர் மோடி 10 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை நிறைவு செய்துள்ள நிலையில் பாஜக இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் அதிமுக ஆதரவு அளிக்கும் என்ற எங்களின் நிலைப்பாட்டை நான் தெரிவித்திருந்தேன்.
அந்த நிலைப்பாட்டோடு புதிய நீதிக்கட்சி தலைவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து அரசியல் சூழ்நிலை குறித்து பேசினோம்.
இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் என்று நாங்கள் கூறிவிட்டோம். பாஜக இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் ஆதரவு தருவோம் என்று கூறியுள்ளோம்.” என்று தெரிவித்தார்.
அப்போது இபிஎஸ் அணியுடன் பாஜக கூட்டணி வைத்தால் உங்கள் நிலைப்பாடு என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ‘யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது’ என்று பதில் அளித்தார்.
அதேபோல் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, “பொதுவாகவே தேர்தல் வேட்புமனு முடிவடைவதற்கு முன்னால் பல்வேறு கட்சிகள் நிலைப்பாடே மாறுகின்ற சூழ்நிலைக்கு ஏற்படும்.
அந்த சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் தங்கள் நடைமுறையை மாற்றிக்கொள்வார்கள் என்பது தான் கடந்த காலத்தின் உண்மை.
எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் கூறிவிட்டோம். மற்ற கட்சியின் நிலைப்பாட்டை நாங்கள் எப்படி கூற முடியும். இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடுவோம்.” என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
பன்னீர்செல்வத்துடன் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் ஏ.சி. சண்முகத்தை சந்தித்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆஸ்கர் ரேஸில் அதிகாரப்பூர்வமாக இணைந்த ’ஆர்.ஆர்.ஆர்.’
டிஜிட்டல் திண்ணை: பாஜக இல்லாமலே இரட்டை இலை- எடப்பாடி சொன்ன சீக்ரெட்!