இந்தியாவில் அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்க்கட்சி எம்.பிக்களை நோக்கி, “’அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், அடுத்த 7 ஜென்மத்திற்கு சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்” என விமர்சித்தார்.
சர்ச்சைக்குரிய அவரது இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
நாடாளுமன்றம் இன்று காலை கூடியதும் இந்தியா கூட்டணி எம்.பிக்கள், அமித் ஷாவை மன்னிப்பு கேட்க கோரி அமளியில் ஈடுப்பட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் பெயரை தான் சொல்லவேண்டும்!
அதன்படி, அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.
நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்னும் பல நூறுமுறை சொல்வோம்!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று சொல்கிறார்கள்” என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
எப்படி எங்கே செல்லலாம் என டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதற்கு பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும். அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியலமைப்பு சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலையும் பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறுமுறை அண்ணலின் பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம்!” என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
நீங்கள் அமைச்சர் ஆனதே அவரால் தான்!
இதே போன்று சமீபத்தில் விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தள பதிவில், “இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆட்சிக்கு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்திலேயே பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.
அந்த அம்பேத்கர் கொண்டுவந்த அரசியலமைப்பு சட்டம்தான் பிரதமர், உள்துறை அமைச்சர் உட்படப் பல ஏழைத்தாயின் மகன்களும் அரசியல் அதிகாரத்தை அடையக் காரணம். அதுவே, இன்று அனைவரும் பரவலாக அரசியல் உரிமைகளைப் பெற வழிவகுத்தது. கடவுளின் பெயரைச் சொல்லி சொர்க்கம் செல்பவர்கள் செல்லட்டும்.
ஆனால், புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்த சட்டத்தின் வழியில் சட்டமன்றம், நாடாளுமன்றம் சென்று மக்களுக்கான அதிகாரத்தை வென்றறெடுக்கவும், எல்லோருக்குமான அரசு, சமதர்ம சமூகத்தை உருவாக்கவும் அரசியல் அமைப்பு காட்டிய சட்ட வழியில் பயணிப்போம்” என ஆதவ் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அம்பேத்கர் குறித்து அமித் ஷா சர்ச்சைப் பேச்சு : முடங்கியது நாடாளுமன்றம்!
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் : மேலும் ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு!
அல்லு அர்ஜுனுக்கு அடுத்த சிக்கல் : சிகிச்சை பெற்ற சிறுவன் மூளைச்சாவு!