கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் அன்போடு அழைப்பு விடுத்ததாக அண்ணாமலை இன்று (ஆகஸ்ட் 14) தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா அரசு சார்பிலும், திமுக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கலைஞரின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்ட ரூ.100 மதிப்புள்ள நாணயம் கடந்த ஜூன் 4-ம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, இந்த நாணயத்தை அதிகாரப்பூர்வமாக வரும் 17 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில், தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார். இதற்கான ஏற்பாடுகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்களுக்கு விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
எதிர்கட்சிக்கட்சி தலைவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கும் பணி திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சிமுருகனிடம் வழங்கப்பட்டது.
அதன்படி முதலில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் அழைப்பிதலை நேரில் வழங்குவதற்கு நேரம் கேட்கப்பட்டது. அதற்கு, பழனிசாமி சேலத்தில் இருக்கிறார் என்றும், சென்னையில் உள்ள அவரது வீட்டில் வழங்கும்படியும் தெரிவிக்கப்பட்டது. அதன்படியே அழைப்பிதழும் கொடுக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அப்போது கலைஞர் உடனான சட்டமன்ற, அரசியல் நிகழ்வுகளை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியுடன் பூச்சி முருகனிடம் விவரித்துள்ளார் ஓபிஎஸ்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் நேரம் கேட்கப்பட்ட நிலையில், இன்று பிற்பகலில் நேரம் வழங்கியதுடன், அழைப்பிதழை பெற்றுக்கொண்டு, விழாவில் பங்கேற்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
அதனைதொடர்ந்து இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, இதுகுறித்து பேசினார்.
அவர், “முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு கால சாதனையாக ரூ.100 நாணயம் வெளியிட வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியது. அதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது. நாணயம் வெளியீட்டு விழாவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகிறார்.
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அன்போடு அழைத்தார். பாஜக அலுவலகத்திற்கும் திமுக அலுவலகச் செயலாளர் பூச்சி முருகனை அனுப்பி அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
பாஜகவைப் பொறுத்த வரை இதனை நாங்கள் அரசியலாகக் பார்க்கப்போவதில்லை.
ஏனெனில் கலைஞர் ஐயாவுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்க வேண்டும். அந்த விழாவில் தமிழக பாஜக சார்பில் நானும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் பங்கேற்போம். காரணம் மத்திய அரசே அனுமதி அளித்த நாணயம் வெளியிடுவது தமிழகத்திற்கு கிடைத்த பெருமையாக பார்க்கிறோம், கலைஞருக்கு கிடைத்த பெருமையாக பார்க்கிறேன்.
கட்சி அடிப்படையில் சித்தாந்த ரீதியாக வேறுபாடுகள் இருக்கலாம். ஐந்து முறை முதல்வராக இருந்துள்ளார். தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல கால கட்டங்களில் உழைத்துள்ளார். ஆகவே, பாஜக கட்டாயம் விழாவில் பங்கேற்கும்” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா