அதிமுக கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று தினத்தந்தி ஏட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முக்கிய தலைவருமான அமித் ஷா தெரிவித்திருந்தார்.
இந்த தகவல் தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
தஞ்சையில் இன்று (பிப்ரவரி 7) அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஆலோசனைக் கூட்டத்துக்காக வந்திருந்த ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள், அமித் ஷாவின் கருத்து பற்றி கேட்டனர்.
அப்போது பதிலளித்த ஜெயக்குமார்,
“பாஜக வேண்டுமானால் அதிமுகவுக்கு கதவைத் திறந்து வைக்கலாம். ஆனால் பாஜகவுக்கான கதவை அதிமுக சாத்தி விட்டது. அதிமுக முன் வைத்த காலை பின் வைக்காது. நாங்கள் அவர்களுக்கான கதவை சாத்தி பெரிய பூட்டு போட்டுவிட்டோம். எந்த காலத்திலும் இதுதான் முடிவு.
அதிமுகவின் முப்பெரும் தலைவர்களான அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை அவர்கள் தொடர்ந்து சிறுமைப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். இதை எங்கள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ளவில்லை.
தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவு அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முழுமனதாக அதிகாரபூர்வமாக தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதைத் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள். இதுதான் தொண்டர்களின் மனநிலை. எனவே பிஜேபிக்கான கதவு எங்களால் ஏற்கனவே சாத்தப்பட்டுவிட்டது” என்று பதிலளித்தார் ஜெயக்குமார்.
–வேந்தன்
”ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை” : நடிகர் விஷால்