“உச்ச நீதிமன்றத்துக்குச் செல்வோம்” : ஓபிஎஸ் தரப்பு!
அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வெளியாகி ஓபிஎஸ் தரப்புக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கும் நிலையில், எங்களது சட்டப்போராட்டம் தொடரும் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 25) தீர்ப்பு வழங்கியது. ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்பை எடப்பாடி தரப்பு கொண்டாடி வரும் நிலையில், ஒபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றம் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், “தீர்ப்பு இப்படிதான் வரும் என்று நான் எதிர்பார்த்ததுதான். பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டதால் அதையே உயர் நீதிமன்றம் உறுதி செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
நேற்றைய தினமே எடப்பாடி தரப்பினர் வான வேடிக்கைகளுக்கு எல்லாம் தயாராக இருந்தார்கள் என்ற தகவல்கள் கிடைத்தது. அதனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
எங்களது சட்டப்போராட்டம் தொடரும். உச்ச நீதிமன்றம் செல்வோம். உண்மையான அதிமுக யார் என்பதை 2024 தேர்தல் நிரூபிக்கும்” என்று கூறியுள்ளார்.
பிரியா
நிலவில் இறங்கிய ரோவர்: வீடியோவை பகிர்ந்த இஸ்ரோ!
“ஜெயலலிதாவின் டிரைவரே இல்லை, சசிகலாவுக்குதான் டிரைவர்” -தனபால் புகாருக்கு கொந்தளித்த எடப்பாடி