திமுக அமைச்சர்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நிலையில், அடுத்ததாக அக்கட்சியின் பொருளாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் பேச்சும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.
திமுக தலைமையிலான அரசின் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். அதிலும் ஒரு சர்ச்சையை ஆரம்பித்து வைத்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ’இப்போலாம் பேருந்துல எப்படி போறீங்க, எல்லாம் ஓசி’ என பேசியது வைரலானது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அடுத்ததாக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். குறவர் சமுதாயத்திற்கு தமிழக அரசிடம் சமூக பிரதிநிதித்துவம் அளிப்பது தொடர்பாக வனவேங்கைகள் கட்சித் தலைவர் இரணியன் அமைச்சரை நேரில் சந்தித்துள்ளார்.
அப்போது அமைச்சர் அவர்களை நாற்காலியில் அமர வைக்காமல், ஒருமையில் பேசியதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பான காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியானது.
சாதி அரசியலுக்கு எதிராக செயல்படுவதாக வெளியே காட்டிக் கொள்ளும் திமுகவில், ஒரு அமைச்சர் சாதியை காரணம் காட்டி தீண்டாமை செயலில் ஈடுபட்டதாக எதிர்ப்புக் குரல் எழ ஆரம்பித்தது.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரோ, ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என பேசியிருக்கிறார்.
ஆம்னி பேருந்துகளை சேவையின் அடிப்படையில் இயக்க முடியாது என்றும், அவர்களும் தொழில்தான் செய்வதாகவும் தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதே அமைச்சர் தான் கடந்த ஆகஸ்ட் மாதம், அதிக கட்டணம் செய்யும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். இது இரண்டையும் ஒப்பிட்டு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
இந்தநிலையில் திமுகவின் நீர்வளத்துறை அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான துரைமுருகனும் இப்போது விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார்.
வேலூரில் செப்டம்பர் 28 ஆம் தேதி ஒர் நிகழ்வில் பேசிய அவர், மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க சில்லரை மாற்றிக்கொண்டிருப்பதாக கிண்டலாகப் பேசியிருக்கிறார்.
”அம்மாவுக்கும் ஆயிரம், பொண்ணுக்கும் ஆயிரம் கொடுக்கும் ஒரே ஆட்சி இந்த ஆட்சிதான்” என்று அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தேர்தல் வாக்குறுதிகளாகவே நலத்திட்டங்களை திமுக அரசு அறிவித்தது. ஆனால் தற்போது அதையே சொல்லி ஏளனமாக பேசுவது கண்டனத்துக்குரியது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு அமைச்சர்களின் இதுபோன்ற பேச்சுகளை கண்டிக்காவிட்டால் அரசு மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரிக்கும் என்ற எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனர்.
கலை.ரா, ஜெயப்பிரியா
டி20 உலகக் கோப்பை: பும்ரா விலகலுக்கு இதுதான் காரணம்!
காங்கிரஸ்: அடுத்த தலைவர் திக் விஜய் சிங்? கெலாட் ஒதுங்கிய பின்னணி!