ஷேக் ஹசீனா இனி வங்கதேசம் செல்ல மாட்டார் என்று அவரது மகன் சஜீப் வாசெத் ஜாய் இன்று (ஆகஸ்ட் 6) தெரிவித்துள்ளார். sheikh hasina
வேலைவாய்ப்பின்மை, இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை, கொரோனாவுக்கு பின் உருவான பொருளாதார மந்தநிலை, எதிர்க்கட்சி தலைவர்களின் கைது போன்ற காரணங்களால், கடந்த சில வாரங்களாக வங்கதேசத்தில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இதன் உச்சமாக, நேற்று (ஆகஸ்ட் 5) அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஹெலிகாப்டரில் இந்தியாவிற்குத் தப்பிச்செல்லும் நிலைமை ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் ஹிந்தோன் விமான நிலையத்தை விமானம் மூலம் வந்தடைந்தார்.
இங்கிருந்து அவர் எங்குச் செல்லப்போகிறார் என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் அவரது மகன் சஜீப் வாசெத் ஜாய் பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி கொடுத்துள்ளார்.
“அம்மா (ஷேக் ஹசீனா) நாட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை. ஆகஸ்ட் 3-ஆம் தேதி மக்களிடம் உரையாற்றிவிட்டு, பதவியை ராஜினாமா செய்வதாக அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், அசாதாரணமான சூழல் நிலவியதால், நாங்கள் தான் அவரை நாட்டை விட்டு வெளியேற வற்புறுத்தினோம்” என்று தெரிவித்துள்ளார். sheikh hasina
ஷேக் ஹசீனா லண்டன் தஞ்சம் புக இருக்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த சஜீப், “அவர் இந்தியாவிலிருந்து எங்குச் செல்லவிருக்கிறார் என்று இன்னும் முடிவுசெய்யவில்லை” என்றார்
அவரின் 15 ஆண்டுக்கால ஆட்சியைப் பற்றி “அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. சிறந்த ஆட்சியை வங்கதேசத்திற்கு வழங்கினார்” என்று கூறினார்.
ஷேக் ஹசீனா இனி அரசியலுக்குத் திரும்பப்போவது இல்லை என்றும், வங்கதேசத்திற்கும் இனி அவர் வரமாட்டார் என்றும் சஜீப் வாசெத் ஜாய் தெரிவித்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
Share Market: தொடர் சரிவில் பங்குச்சந்தை: ஃபோகஸ் செய்ய வேண்டிய பங்குகள் என்னென்ன?
ஹேப்பி நியூஸ் மக்களே: தங்கம் விலை குறைஞ்சிடுச்சு… எவ்வளவு தெரியுமா?