பரந்தூரில் நிலம் கையகப்படுத்துவது எங்கள் வேலை அல்ல! : மத்திய அமைச்சர்

அரசியல்

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

இட நெருக்கடியை முன்னிட்டு சென்னை அருகே பரந்தூரில், இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் எதிர்ப்புகளுக்கு இடையேயும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சென்னையிலுள்ள பிரபல தனியார் ஹோட்டலில் சமீபத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்த விளக்கக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்துகொண்டார்.

அடிப்படை கட்டமைப்புக்கு அதிக நிதி

சென்னை கிண்டியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, ”உலக அளவில் நிலவும் பிரச்னைகளுக்கு இடையில் இந்தியா தனக்கான பாதையை வகுத்திருக்கிறது.

உலக அளவில் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சியடைந்திருக்கிறது.

இந்நிலையில் தான் சிறப்பான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ளார். மகளிர் மற்றும் பாதுகாப்புக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

3-வது ஆண்டாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. சாலை மேம்பாட்டுக்கு காங்கிரஸின் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால், பா.ஜ.க ஆட்சியில் இதுவரை 15 லட்சத்து 60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா சுதந்திரமடைந்து 67 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள்தான் கட்டப்பட்டன. ஆனால் பா.ஜ.க ஆட்சியில் எட்டு ஆண்டுகளில் 73 புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.

அடுத்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் 150 விமான நிலையங்கள் மற்றும் ஹெலிபேடுகள் அடுத்த சில ஆண்டுகளில் கட்டப்பட உள்ளது. அதற்கான திட்டமிடல்கள் நடைபெற்று வருகிறது.

விமான நிலையம் அமைப்பது மட்டுமே எங்கள் பணி

சிறு, குறு தொழில்களில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. தற்போது சென்னை விமான நிலையத்தில் அனைத்துவிதமான வசதிகளும் அதிக அளவில் தரமானதாக இருக்கின்றன.

எனினும் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆனால் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அனைத்தையும் மாநில அரசுதான் செய்ய வேண்டும். எங்கள் பணி விமான நிலையம் அமைப்பது மட்டுமே.

விமான நிலையம் அமைக்க எழுந்திருக்கும் எதிர்ப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மாநில அரசு தான் தீர்வு காண வேண்டும்.” என்று பேசினார்.

கிறிஸ்டோபர் ஜெமா

டெல்டாவில் பயிர்கள் சேதம்: அமைச்சர்கள் குழுவை அனுப்பிய முதல்வர்!

உயிரிழந்த 4 பெண்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குக! – அன்புமணி

+1
0
+1
0
+1
1
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *