“விவசாயத்தையே நம்பி இருக்க முடியாது” – ஆ.ராசா பேச்சு!

அரசியல்

விவசாயத்தையே நம்பி நீண்ட நாட்கள் இருக்க முடியாது, தொழில் வளர்ச்சி இருந்தால்தான் நமது பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எம்.பி. ஆ.ராசா கூறியுள்ளார்.

கோவை மாவட்டம், அன்னூர் தாலுகாவில் நான்கு ஊராட்சிகளிலும், மேட்டுப்பாளையம் தாலுகாவில் இரண்டு ஊராட்சிகளிலும் என 6 ஊராட்சிகளில், 3862 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு கடந்த அக்டோபரில் அறிவித்தது.

இந்நிலையில், நீலகிரி எம்பி ராசா மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 1630 ஏக்கரில் மட்டும் தொழில் பூங்கா அமைக்கப்படும், விவசாயிகளின் நிலம் கையகப்படுத்த மாட்டாது என அறிவித்தது.

இந்நிலையில் இதுகுறித்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நீலகிரி எம்பி ராசா இன்று(டிசம்பர் 18) குப்பனூர் ஊராட்சி, குழியூர்- கோவில் மண்டபத்திற்கு வந்தார்.

எம்.பி ராசா, கோவை வடக்கு ஆர்டிஓ பூமா, அன்னூர் தாசில்தார் தங்கராஜ், மேட்டுப்பாளையம் தாசில்தார் மாலதி, போராட்டக் குழு தலைவர் குமார ரவிக்குமார், செயலாளர் ஏ.வி ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

We cannot rely on agriculture A Rasa speech

பேச்சுவார்த்தைக்கு பிறகு நீலகிரி எம்பி ராசா, “பேச்சுவார்த்தையின் போது அரசு அறிவித்த 1630 ஏக்கருக்கு பதில், 800 முதல் 900 ஏக்கர் மட்டுமே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

இது குறித்து ஆர்டிஓ விசாரிப்பதாக, ஆய்வு செய்து தெரிவிப்பதாக கூறியுள்ளார். எனினும் இந்தப் பகுதியில் எந்த விவசாயி நிலமும் கையகப்படுத்தப்பட மாட்டாது என பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்டது.

தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தில், எந்த தொழிற்சாலை அமையும் என்பது குறித்து கோவை கலெக்டர் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.

இந்தப் போராட்ட குழு சார்பில் ஐந்து பேரும், மற்றொரு போராட்டக் குழு சார்பில் இருவரும், எம்.பி,  எம். எல்.ஏ, சேர்மன் ஆகியோர் அடங்கிய பதினைந்து பேர் குழு அந்த தொழிற்சாலையின் விண்ணப்பத்தை பெற்று, அது மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலையா? இல்லையா? என்பதை ஆய்வு செய்து இந்த தொழிற்சாலையால் பிரச்சனை இல்லை என உறுதி செய்த பிறகு, அந்த தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்படும்.

எந்த பிரச்சனையும் இல்லாத தொழிற்சாலை சரியான நிறுவனத்தில் அமைக்க ஒத்துழைப்பு தர வேண்டும். விவசாயத்தையே நம்பி நீண்ட நாட்கள் இருக்க முடியாது. தொழில் வளர்ச்சி இருந்தால்தான் நமது பிள்ளைகளுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இன்னும் ஒரு வாரத்திற்குள் டிட்கோ சேர்மனை அழைத்து வந்து, மீண்டும் போராட்டக் குழுவுடன் பேச நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு ராசா தெரிவித்தார்.

We cannot rely on agriculture A Rasa speech

போராட்டக் குழு தலைவர் ரவிக்குமார் கூறுகையில் “அரசு தரப்பில் 1630 ஏக்கர் தனியார் கம்பெனி நிலம் உள்ளதாக கூறினர். ஆனால் 815 ஏக்கர் நிலம் தான் உள்ளது. அதுவும் 86 இடங்களில் பிரிந்து உள்ளது.

எனவே அங்கு தொழிற்சாலை அமைப்பதில் பல்வேறு சிரமங்கள் இருக்கிறது என்பதை எம்.பி ராசா விடமும், ஆர்டிஓ விடமும் எடுத்துக் கூறினோம். இதுகுறித்து விசாரிப்பதாக தெரிவித்தனர்.

மேலும் டிட்கோ சேர்மன் ஒரு வாரத்திற்குள் வந்து நம்மிடம் பேசுவதாக கூறியுள்ளனர். எனவே அதுவரை போராட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது. டிட்கோ சேர்மன் வந்து ஆய்வு செய்த பிறகு 86 இடங்களில் பிரிந்து உள்ள நிலங்களில், தொழிற்சாலை அமைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

எனவே டிட்கோவும், அரசும் தாங்களாகவே தொழில் பூங்கா அமைப்பதை கைவிட்டு விடுவார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்”. இவ்வாறு ரவிக்குமார் பேசினார். பேச்சுவார்த்தைக்கு வந்ததற்காகவும் நீலகிரி எம்பி ராசாவுக்கு போராட்டக் குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

கலை.ரா

ராகுல் காந்தியின் அழைப்பு: கமல்ஹாசனின் முடிவு!

நாட்டையே அதிர வைக்கும் ஒரு கொலை: ஜார்கண்டில் பயங்கரம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

1 thought on ““விவசாயத்தையே நம்பி இருக்க முடியாது” – ஆ.ராசா பேச்சு!

  1. #தமிழகத்தில் #விவசாயத்திற்கு #மூடுவிழா?

    2019 முதல் ஊரக உள்ளாட்சி (திமுக) மக்கள் பிரதிநிதிகள் பெருமளவு ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் போன்றவற்றை முறைகேடாக ஆக்கிரமித்து பட்டா மாற்றம் செய்து வீட்டு மனைகளாகப் பிரித்து விற்பனை செய்யும் அதிதீவிர களப்பணியில் களமாடுவதால், விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிர் செய்வதற்கு போதிய நீராதாரம் கிடைக்காமல் விவசாயிகள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதால், மக்கள் தங்கள் விளைநிலங்களை கிடைத்த விலைக்கு விற்று விடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன், னு #தெளிவா #சொல்லுண்ணே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *