பாஜக அலுவலகம் மற்றும் தலைவர்கள் மீதான பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதலால் கோவையில் பதற்றம் தொடர்ந்து வரும் நிலையில் போலீஸ் தடையை மீறி இன்று (செப்டம்பர் 26 ) பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை ”ஆ.ராசா இப்படி பேசுவது இது முதல் முறை அல்ல இதற்கு முன்பு திமுக மேடைகளில் இது போன்ற பேச்சுக்கள் பேசப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வராக இருப்பேன் என்று சொன்னார். ஆனால் கலவரம் செய்தவர்கள் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்கிறார்.
பாஜக தொண்டர்கள் மாதம் ஒரு போராட்டம் செய்து வருகின்றனர். ஆ.ராசா அவர்கள் பேசியபோது ஒரு புத்தகத்தை காட்டி பேசினார் அதே புத்தகத்தில் திமுக பற்றி பெரியார் பேசியதை அவரால் பேச முடியுமா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
மேலும், திமுக வின் ஆணி வேர் என்று சொல்லக்கூடிய பெரியார், திமுக வை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதைத்தான் இப்போது மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிவருகிறார்.
எஸ்.டி.பி.ஐ மற்றும் பி.எப்.ஐ போன்ற அமைப்புகள் தங்களை நல்லவர்கள் என்று சொல்லிக்கொண்டு வருகின்றனர்.
மத்திய அரசின் என்.ஐ.ஏ ஐந்து நாட்களுக்கு முன்பு 105 பி.எப்.ஐ அமைப்பைச் சேர்ந்த தலைவர்களை கைது செய்துள்ளனர். அதில் தமிழகத்தில் இருந்து 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய சகோதரர்கள் அதிகம் வாழும் கேரள மாநிலம் மலப்புரத்தில் காலை 4.30 மணிக்கு தவறு செய்தவர்கள், குற்றவாளிகள், தேச விரோதிகளை சி.ஆர்.பி.எப் கைது செய்தது.அது தமிழகத்திலும் நடக்கும் என்று கூறினார்.
முதல் அமைச்சர் ஒன்றும் கடவுள் கிடையாது. செய்த பாவத்திற்கு விமோசனம் தேடி நாங்கள் யாரும் யாகம் நடத்தவில்லை. நாங்கள் தான் சுயமரியாதைக்காரர்கள் திமுக வினர் சுயமரியாதைக்காரர்கள் கிடையாது.
இன்றைக்கு முதல் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , பாஜகவினர் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர் என்று கூறியுள்ளார். ஆம் , நாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று கனவு காண்கிறோம். மதுவிற்கு அடிமையாகியுள்ள 1 கோடியே பத்து லட்சம் பேரை வெளியில் கொண்டவர இருக்கிறோம் அதனால் தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக பேசினார்.

ஒரு சமுதாயத்திலே மிக முக்கிய துறையாக இருப்பது காவல்துறை. மிக முக்கியம், ஏழைகள் – பணக்காரர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் கூட முதலிலே நம்பி போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் ஐயா காப்பாத்துங்க அப்படின்னு ஒரு வார்த்தையை அவர்களுக்கு மட்டும்தான் சொல்லுவோம், வேற யாருக்கும் சொல்ல மாட்டோம்.
கோவையில்அவர்கள் நடந்து கொண்ட முறை சரியா என்பதை கோவை மாநகரத்தில் இருக்கக்கூடிய ஒரு ஒரு காவல்துறை நண்பனும் உணர்ந்து கொள்ள வேண்டும். தடியடி நடத்துவது பெண் காரிய கர்த்தாக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்தது நியாயமா என உணர வேண்டும். மாவட்டத் தலைவர் பேசிய கருத்துகளுக்காக வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாய வைத்தது இதையெல்லாம் இந்தியாவிலே முதல்முறையாக நம்முடைய கோவை மாநகர காவல் துறை நண்பர்கள் நீங்கள் காட்டி இருக்கின்றீர்கள்.

நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லியிருந்தோம், மறுபடியும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்பு சொல்வது எனது கடமையாக இருக்கிறது. இரண்டு வருடம் கழித்து எங்களின் மீது எந்த காவல்துறை நண்பர்கள் எல்லாம் கையை வைத்தீர்களோ, உங்களின் மீது எந்தவிதமான துறை ரீதியான நடவடிக்கை வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல, ரிடையர்மெண்டாகும் போது உங்களுக்கு பென்ஷன் கிடைக்கவில்லை என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல,
எங்களின் மீது கையை வைத்தவர்கள் ஒரு ஒரு நாளும் எதற்காக இந்த கண்ணியமான காவல்துறை ஆடையை அணிந்தேன் என்று நீங்கள் வருத்தப்பட்டீர்கள் என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது. அதே நேரத்துல 99 சதவீத காவல்துறையின் நண்பர்கள் நல்லவர்கள். மனசாட்சிக்கு பயந்தவர்கள்.

12,000, 20,000 சம்பளமாக இருந்தால் கூட அதை வைத்து வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆளுங்கட்சிக்கு சார்பாக நடக்க மாட்டேன். அதற்காக என்னை தூக்கி நீ கன்னியாகுமரியில், தூத்துக்குடியில், திருநெல்வேலியில், கோயம்புத்தூரில் இருந்து போட்டாலும் பின்வாங்க மாட்டேன் என்று சொல்லக்கூடிய நண்பர்களும் இந்த கொங்கு மண்ணிலே தமிழகத்தில் இருக்கின்றார்கள்” என பேசினார் அண்ணாமலை.
மு.வா.ஜெகதீஸ் குமார்
Comments are closed.