மணிப்பூரில் நிலவும் நிலைமை குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகவும், அதை எதிர்க்கட்சிகள் தான் தடுப்பதாகவும் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இதில் மணிப்பூர் கலவரம் குறித்து நாட்டின் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும், அறிக்கை கொடுக்க வேண்டும். இதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர்.
மத்திய அரசு தரப்பு, பிரதமர் மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசிவிட்டார். எதிர்க்கட்சிகள் மணிப்பூர் சம்பவத்தை அரசியல் ஆக்குகின்றன என்று தெரிவித்தது.
ஆனால் நாடாளுமன்றத்துக்குள் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால் இரு அவைகளின் அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று (ஜூலை 24) பிற்பகல் 2.30 மணிக்கு மக்களவை கூடியது.
அப்போது பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. ஆனால் அதை எதிர்க்கட்சிகள் தான் தடுக்கின்றன. எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். முக்கியமான பிரச்சனையில் உண்மை என்னவென்று மக்களுக்குத் தெரிய வேண்டும்” என்று கூறினார்.
அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள், தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். இதனால் மக்களவையை நாளை வரை ஒத்திவைப்பதாகச் சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்தார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து மாநிலங்களை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து மணிப்பூர் விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கை குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த தீவிரமான விஷயம் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசுகிறார். நாடாளுமன்றத்துக்குள் பேசவில்லை. இது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்” என்று தெரிவித்துள்ளார்.
பிரியா
அவசரமாக நீக்கப்பட்ட அம்பேத்கர் படங்கள்: வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!