“நிர்மலா சீதாராமன் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை” : உதயநிதி பதில்!

Published On:

| By Kavi

Udayanidhi reply to Nirmala Sitharaman

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மரியாதைக்குரிய அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Udayanidhi reply to Nirmala Sitharaman

மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வெள்ள பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை வந்திருந்த போது சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்கள் வெள்ள நிவாரணம் எழுப்பிய கேள்விக்கு,  “கேட்டதும் கொடுப்பதற்கு ஏடிஎம் ஒன்றும் கிடையாது” என்று பதிலளித்திருந்தார்.

இதுகுறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,  “நாங்கள் என்ன அவர்கள் அப்பா வீட்டு காசையா கேட்கிறோம். மக்கள் கொடுத்த வரிப் பணத்தைத் தானே கேட்கிறோம்” என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக இன்று (டிசம்பர் 22) டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “அவருடைய பாஷை அப்படிதான். சனாதனம் பற்றி பேசும் போது கூட நாங்கள் அழிக்க வரவில்லை ஒழிக்க வந்திருக்கிறோம் என்றார். ‘அவங்க அப்பன் வீட்டு பணமா’ என்று கேட்கிறவர்,  ‘அவங்க அப்பன் வீட்டு சொத்தை’ வைத்துக்கொண்டு பதவியை அனுபவித்து கொண்டிருக்கிறாரா?. இப்படி கேட்க முடியுமா? இந்த பேச்சு எல்லாம் அரசியலில் நல்லது இல்லை. அவர் அரசியலில் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவரது குடும்பமும் ஆசைப்படுகிறது.

அவருடைய தாத்தா எப்பேற்பட்ட தமிழ் அறிஞர். பதவிக்கு ஏற்றளவுக்கு வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். இதை அவர் மீதான காழ்ப்புணர்ச்சியில் சொல்லவில்லை” என கூறினார்.

இந்தசூழலில், நான் ஒன்றும் நிர்மலா சீதாராமனின் மரியாதைக்குரிய அப்பா சொத்தை கேட்கவில்லை என கூறி அவருக்கு பதிலளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

“யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் – அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – கட்சித் தலைவர் – முதலமைச்சர் ஆகியோர் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள்.

சிலரிடம் அண்ணாவைப் போல –  சிலரிடம் கலைஞரைப் போல – சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது.

வெள்ள பாதிப்புக்காக அரசு நிவாரண நிதி கேட்டால்,  “நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ” என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்” என்று கூறினேன்.

என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன்.

ஆனாலும், மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்.

மீண்டும் சொல்கிறேன் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம்.

வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம்.

நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும்  ‘மரியாதை’ தருவதற்கு தயாராகவே இருக்கிறோம் – தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே!” என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மீண்டும் இயக்குநராக களமிறங்கும் தனுஷ்… அப்டேட் வெளியானது!

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்… ரசிகர்கள் அதிர்ச்சி!

Udayanidhi reply to Nirmala Sitharaman

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel