“வாழ்த்து சொல்ல வந்தேன்”: ED அலுவலகத்தில் ஆஜரான கார்த்தி சிதம்பரம்

அரசியல் இந்தியா

சிவகங்கை காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் இன்று (டிசம்பர் 23) அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

2009-2014ல் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, பஞ்சாப் மாநிலத்தில் தால்வாண்டி சாபோ மின்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் சீனாவைச் சேர்ந்த ஷான்டாங் எலெக்ட்ரிக் பவர் கன்ஸ்ட்ரக் ஷன் கார்ப் (செப்கோ) என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

சீனாவிலிருந்து இந்தியாவுக்குச் சீன தொழில்நுட்ப நிபுணர்களை அழைத்து வர, 263 விசாக்கள் ஒதுக்கப்பட்டன. இதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ, சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. சிபிஐயை தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தொடர்பான ஆவண நகல்களைப் பெற்றுக்கொள்ளவும், வாக்குமூலம் பெறுவதற்காகவும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் இன்று (டிசம்பர் 23) டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார் கார்த்தி சிதம்பரம்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ததாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “ED அலுவலகத்தில் இது எனக்கு 20ஆவது நாள். அதிகாரிகள் ஒரே கேள்விகளை கேட்கிறார்கள். நானும் அதே பதில்களைச் சொல்கிறேன்.

இது கிடப்பில் கிடக்கும் ஒரு வழக்கு. சிபிஐ இந்த விஷயத்தை முடித்துவிட்டது. ஆனால் அமலாக்கத் துறை இந்த வழக்கை மீண்டும் திறந்து என்னிடம் எதாவது கேட்க வேண்டும் என்று விரும்புகிறது. எனது வழக்கறிஞர்கள் ஏற்கனவே விரிவாக 100 பக்க பதில்களை அளித்துள்ளனர்.

இது கிறிஸ்துமஸ் சீசன். அதிகாரிகள் என்னை மிஸ் செய்கிறார்கள் என்பதால் திரும்பத் திரும்ப அழைக்கிறார்கள். நாங்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டோம்” என்று கிண்டலாக தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஒரு பந்துக்கு ரூபாய் 7.6௦ லட்சம்… இதெல்லாம் நியாயமே கெடையாது… முன்னாள் வீரர் காட்டம்!

”மரியாதை குறைவாக எந்த வார்த்தையும் பேசவில்லை” : உதயநிதி ஸ்டாலின்

+1
0
+1
2
+1
1
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *