”தமிழ்நாடு தாண்டி இந்தியா முழுமையிலும்…”- கோவையில் ஸ்டாலின் உறுதி!  

அரசியல்

அண்மையில் அதிமுகவில் இருந்து திமுகவில் சேர்ந்த கோவை செல்வராஜ் தனது  ஆதரவாளர்கள்  மூவாயிரம் பேரை இன்று (மார்ச் 11) முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்க்கும் விழாவை நடத்தினார்.

கோயமுத்தூரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், “இடைத் தேர்தலுக்கு முன்பே இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது. ஆனால்  இடைத் தேர்தல் பணிகள் இருந்தமையால் இன்று நடைபெறுகிறது. கோவை செல்வராஜ் ஏற்கனவே திமுகவில் சேர்ந்திருந்தாலும் அவரது முயற்சியால்  நமது மாவட்ட கழக முன்னோடிகளின் ஒத்துழைப்போடு இன்று 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகளில் இருந்து சேர்ந்திருக்கிறார்கள். உங்களை வரவேற்கிறேன்.

கோவை செல்வராஜ் எப்படிப்பட்ட செயல் வீரர், எப்படிப்பட்ட பேச்சாளர், விவாத மேடைகளில் எப்படி ஆற்றலோடு பங்கேற்பார் என்று எல்லாருக்கும் தெரியும். அவர் அதிமுகவில் இருந்தபோது தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளை நான் பார்த்தவன். அப்படி பார்த்துக் கொண்டிருந்தபோது சில நேரங்களில் எனக்கு கோபம், ஆத்திரம் வரும். ஆனால் செல்வராஜ் விவாத மேடைகளில் பங்கேற்கிறபோது எனக்கு ஆத்திரம், கோபம் வருவது இல்லை.  எதையும் வெளிப்படையாக பேசுவார். சில நேரங்களில் நம்மை திட்டி பேசியிருக்கிறார். வைரத்தை தீட்டத் தீட்டத்தான் ஜொலிக்கும் என்பதைப் போல, நம்மை திட்டத் திட்டத்தான் ஜொலிப்போம்.

வரலாற்றில் இடம்பெற்றிருக்கக் கூடிய கட்சிகளும் உண்டு. சில கட்சிகள் இருக்கின்றன. திடீர் திடீரென தோன்றக் கூடிய கட்சிகளையும் பார்க்கிறோம். அப்படி தோன்றிய கட்சிகள் எல்லாம் தோன்றிய அடுத்த நாளே  நான் தான் அடுத்த முதல்வர் என்று  சொன்னதையும் பார்த்திருக்கிறோம். அவர்கள் அனாதைகளாக அலைந்துகொண்டிருப்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  அதனால்தான் அண்ணா இந்த கட்சியைத் தொடங்கும்போதே சொன்னார், ‘ஆட்சிக்காக மட்டுமே தொடங்கப்பட்ட இயக்கம் இதுவல்ல’ என்று.  

1949 இல் தொடங்கப்பட்ட திமுக 1957 ஆம் ஆண்டு தேர்தலில்தான் களமிறங்கியது. அதையும் மாநாட்டிலே பெட்டி வைத்து வாக்களிக்கச் சொல்லி தொண்டர்கள் முடிவெடுக்க கோரினார். தேர்தலில் ஈடுபட வேண்டும் என்று கட்சியினர்  பெரும்பாலானோர் வாக்களித்தனர். அதன் பிறகுதான் 1957 தேர்தலில் நாம் போட்டியிட்டோம். அந்தத் தேர்தலில் 15 பேர் சட்டமன்ற உறுப்பினர்கள்ளாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களில் நம் தலைவர் கலைஞர் குளித்தலை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின் 1962 இல் 50 பேர் வெற்றி பெறுகிறோம். எதிர்க்கட்சி வரிசையில் உட்காருகிறோம். அதைத் தொடர்ந்து அண்ணா தலைமையிலே 1967 இல் பெரும்பான்மை பெற்று ஆட்சிப் பொறுப்பேற்கிறோம். ஆட்சிக்கு வந்த அண்ணா  ஒரே ஆண்டுதான் இருந்தார். நமது அடிப்படையான திட்டங்களை செயல்படுத்தினார். அதன் பின்  கலைஞர் 1971 இல் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றார். 

1975 இலே  இந்திரா காந்தி தனக்கு வந்த நெருக்கடியில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள இந்தியாவில் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். அந்த நெருக்கடி நிலையில் பலர் கைது செய்யப்பட்டனர்.  வட மாநிலங்களில் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆட்சியில் இருக்கும் கலைஞருக்கு டெல்லியில் இருந்து தூது வருகிறது. இந்திரா காந்தியால் அனுப்பப்பட்ட தூதர்கள் வருகிறார்கள். ‘நெருக்கடி நிலையை எதிர்க்கக் கூடாது. எதிர்த்தால் உங்கள் ஆட்சியே இருக்காது’ என்று சொன்னார்கள். அவர்களிடத்தில் கலைஞர் என்ன சொன்னார் தெரியுமா, ‘ஆட்சி என்ன, என் உயிரே போனாலும் கவலைப்பட மாட்டேன். எனக்கு ஜனநாயகம்தான் முக்கியம்’ என்று சொல்லி தூதரை அனுப்பி வைத்துவிட்டு அடுத்த நாளே கடற்கரையில் லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்டி, ‘நெருக்கடி நிலையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதை பயன்படுத்தி கைது செய்யப்பட்ட தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என்று தீர்மானம் முன்மொழிந்து கடற்கரையில் திரண்ட லட்சக்கணக்கான மக்களை வழிமொழிய வைத்தார். அடுத்த வினாடி தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சி கவிழ்க்கப்படுகிறது. அதையடுத்து நாங்கள் எல்லாம் மிசா சிறையில் அடைக்கப்படுகிறோம். அப்போதும் தலைவர் கலைஞர் ஆட்சியைப் பற்றி கவலைப்படவில்லை. மக்களைப் பற்றித்தான் கவலைப்பட்டோம்.

அதன் பின் 13  வருடம் ஆட்சிக்கு வர முடியவில்லை. 89 இல் ஆட்சிக்கு வருகிறோம். அதைத் தொடர்ந்து 91 இல் மீண்டும் ஆட்சி கலைக்கப்படுகிறது. புலிகளுக்கு திமுக ஆதரவு என்று பழிபோட்டு கவிழ்த்தார்கள்.   அதன் பின் 96 இல் ஆட்சி, 2006 ஆல் ஆட்சி என்பதெல்லாம் உங்களுக்கு தெரியும்.

இப்போது ஆறாவது முறையாக 2021 இல் ஆறாவது முறையாக என் தலைமையில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த நாட்டில் நம்மைப் போல் வெற்றி பெற்ற கட்சியும் கிடையாது. நம்மைப் போல் தோல்வியுற்ற கட்சியும் கிடையாது. வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாமல் மக்களுக்காக போராடக் கூடிய இயக்கம் திமுக.

சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் ஆட்சிதான் நமது ஆட்சி. அதனால்தான் கொங்கு மண்டலத்தில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் நமது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியை 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்திருக்கிறோம். ஏற்கனவே நடந்த தேர்தலில் பத்தாயிரத்துக்கும் குறைவான வித்தியாசம். இப்போது  66 ஆயிரம் வித்தியாசம். என்ன காரணம்? இந்த ஆட்சியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை.  ஆகவே இதை  வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலே இதேபோன்ற வெற்றியை நாம் பெற்றாக வேண்டும். அதற்கு உறுதியெடுத்துக் கொள்ளக் கூடிய நிகழ்ச்சியாக இது இருக்க வேண்டும்.  

தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி மட்டுமல்ல, இந்தியா முழுமையும் இருக்கக் கூடிய  அனைத்து மாநிலங்களிலும் வெற்றியை பெறுவதற்கான முயற்சியிலே முழுமையாக ஈடுபடப் போகிறோம். அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும்” என்று உரையாற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

வேந்தன்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *