தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி நிறைவு விழா இன்று (ஜூலை 25) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார்.
அப்போது, ”ஜூன் 30-ஆம் நாள் தொடங்கப்பட்ட இந்த போட்டிகள், இன்று நிறைவு விழா காண்கிறது. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் தொன்மையான பாரம்பரிய விளையாட்டுகளான கபடி மற்றும் சிலம்பாட்டம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
விளையாடும் வீரர்களுக்கு உடல் திறன் மேம்படுகிறது. அதனைப் பார்த்து ரசிப்பவர்களின் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. விளையாட்டைக் காண வந்தவர்களில் நாளைய சாம்பியன்களும் நிச்சயம் இருப்பார்கள். இதுதான் விளையாட்டின் சிறப்பம்சம்.
முந்தைய காலங்களில் பள்ளி, கல்லூரிகள் என இரண்டு பிரிவுகளில் மட்டுமே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தன. இப்போது மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என்ற பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளன.
முன்பு 10 விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போது 15 விதமான போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகளைச் சிறப்பாக நடத்த மாவட்டக் குழு மாநிலக் குழு அமைக்கப்பட்டது. கிரிக்கெட், சதுரங்கம், பீச் வாலிபால் போன்ற போட்டிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு 50 கோடியே 86 லட்சம் ரூபாய் நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தது. இதில் பரிசுத் தொகையாக மட்டும் 28 கோடியே 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான நடைபெற்ற போட்டிகளில், 3 லட்சத்து 70 ஆயிரம் வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொண்டுள்ளார்கள். அதன்பிறகு மண்டல அளவில் போட்டிகள் நடந்துள்ளன.
மண்டல அளவிலான போட்டிகளில் 27 ஆயிரத்து 54 வீரர், வீராங்கனைகள் பங்கெடுத்துள்ளார்கள். இவர்களை வைத்து மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் மட்டும் 17 இடங்களில் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகள் மட்டும் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்டுள்ளன. அதில் 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் பங்கெடுத்ததைத்தான் முதலமைச்சர் கோப்பைக்கான வெற்றியாக நான் கருதுகிறேன்.
மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளைப் பற்றி நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஒற்றையர் போட்டியாக இருந்தால் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாயும் குழு போட்டியாக இருந்தால் அதிகபட்சம் 9 லட்சம் ரூபாயும் பரிசுத் தொகை பெறும் மாபெரும் போட்டியாக இது அமைந்துள்ளது.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 27 ஆயிரம் பேரையும் சென்னைக்கு அழைத்து வர சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளிர்சாதன வசதி கொண்ட அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வீராங்கனைகள் போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் விடுதிகளுக்குச் சென்று வர போட்டிகளைச் சிறப்பாக நடத்திட ஏதுவாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், மாநகரப் போக்குவரத்துக் கழகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் காவல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது.
‘டீம் ஸ்பிரிட்’ என்று விளையாட்டுக் களத்தில் சொல்வார்கள். விளையாட்டுப் போட்டிகளை நடத்தும்போதும் பல்வேறு துறையினருடன் இணைந்து செயல்படக்கூடிய இத்தகைய ‘டீம் ஸ்பிரிட்’ தேவை. அந்த வகையில், போட்டிகளை நடத்துவதற்கான சிறப்பான சூழலை உருவாக்குவதில் நமது அரசு நற்பெயரை பெற்றிருக்கிறது.
மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து வீரர்- வீராங்கனைகளையும் நான் மனதார பாராட்டுகிறேன். பலருக்குப் பதக்கங்கள் கிடைக்காமல் போயிருக்கலாம். அது முக்கியமல்ல, பங்கேற்புதான் முக்கியம். விளையாட்டில் வெற்றி என்பதே பங்கேற்பதும் சளைக்காமல் போராடுவதும்தான்.
விளையாட்டில் நீங்கள் அனைவரும் அறத்தைப் பேண வேண்டும் என்று சொல்லி, மாநில அளவிலான போட்டிகளில் பங்கெடுத்து பதக்கங்கள் பெற்ற அனைவரையும் பாராட்டுகிறேன்.
நீங்கள் மேன்மேலும் வெற்றிகளை குவிக்க வேண்டும். மாநில அளவில் பல போட்டிகளில் பங்கேற்றுள்ள நீங்கள் இனி வருங்காலத்தில் இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும். விளையாட்டு வீரர்களான நீங்கள் மட்டுமல்ல, நாங்களும் இந்தியாவுக்காகத்தான் பாடுபடுகிறோம்.
எங்கள் அணியும் ‘இந்தியா’ அணிதான். அதன் வெற்றிக்காகத்தான் நாங்களும் ஒருங்கிணைந்து– ‘டீம் ஸ்பிரிட்டுடன்’ பாடுபடுகிறோம்” என்று பேசினார் முதல்வர் ஸ்டாலின்
மோனிஷா
மணிப்பூர் விவகாரம் – நாங்கள் அச்சப்படவில்லை : அமித் ஷா
வசமாக சிக்கிய அதிகாரி: லஞ்ச பணத்தை விழுங்கும் வீடியோ!