ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டமன்ற தேர்தலுடன் வயநாடு மக்களவை இடைத்தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் இன்று (ஆகஸ்ட் 16) தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி மற்றும் கேரளாவின் வயநாடு என இரு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல்காந்தி அமோக வெற்றியை பதிவு செய்தார்.
எனினும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி ரேபரேலி தொகுதியின் எம்.பியாக தொடர முடிவு செய்த ராகுல், வயநாடு தொகுதி எம்.பி பதவியை கடந்த ஜூன் மாதம் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் ஜம்முகாஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்தார்.
அதன்படி ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, 26 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் என மூன்று கட்டமாகவும், ஹரியானாவில் அக்டோபர் 1 அன்று ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.
தொடர்ந்து வயநாடு தவிர்த்து மீதமுள்ள 46 தொகுதிகளிலும் மக்களவை இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.
இதனையடுத்து வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படாதது ஏன்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “வயநாடு மக்களவைத் தொகுதியில் சமீபத்தில் 400க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்ட நிலச்சரிவு காரணமாக இடைத்தேர்தல் தாமதமாகும்” என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.
ராகுல் காந்தியால் காலியான வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தியுள்ளது. பேரழிவுகரமான நிலச்சரிவை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியை நிறுத்த காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தலை தாமதப்படுத்தியுள்ளது தேர்தல் ஆணையம். அதேவேளையில் தேர்தல் ஆணையத்தில் இந்த முடிவு பாஜக மற்றும் எல்.டி.எஃப்-க்கு தங்கள் வேட்பாளர்களை இறுதி செய்ய கூடுதல் அவகாசத்தையும் வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மெட்ரோவுக்கு பூஜ்ஜியம்…. ரயில்வேக்கு ஆயிரம்… மத்திய அரசை சாடிய டி.ஆர்.பாலு
தொடரும் சோகம் : 15 நபர்களை கடித்த வெறிநாய்கள்!