கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரியும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் இன்று (ஆகஸ்ட் 1) சந்தித்து ஆறுதல் கூறினர்.
கடந்த ஜூலை 30-ஆம் தேதி பெய்த அதிகனமழையைத் தொடர்ந்து வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், காணாமல் போன 200-க்கும் மேற்பட்டோரை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தநிலையில், வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் காலை 9.30 மணிக்கு கன்னூர் விமான நிலையத்திற்கு வந்தனர்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக வயநாடு சென்றவர்கள், சூரமளா பகுதிக்கு சென்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் அங்கு நிவாரண முகாம்களில் தங்கியிருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இடத்திற்கு ராகுல் மற்றும் பிரியங்காவை அழைத்துச் சென்றார்.
இருவரும் ரெயின் கோட் அணிந்தபடி, தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலங்கள் மற்றும் சேறு, சகதிகளில் சிக்காமல் மிகவும் பாதுகாப்புடன் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடந்த 2019 மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் வயநாட்டில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றார். 2024 தேர்தலில் வயநாடு, ரேபரேலி என இரண்டு தொகுதிகளில் ராகுல் வெற்றி பெற்றதால், வயநாடு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரேஷன் பொருட்களில் எடை குறைவா? டோன்ட் வொரி… இனிமேல் பாக்கெட்களில் விற்பனை!
Paris Olympics 2024 : இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்… ஸ்வப்னில் குசலே சாதனை!
புதிய வகை ஓட்டு பொறுக்குதல் போல!