வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கேரளா மாநிலம் வயநாட்டில் நேற்று பெய்த கனமழை காரணமாக மேப்பாடு அடுத்த முண்டக்கை என்ற இடத்தில் நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணிக்கு சுமார் 2 கி.மீ. தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் 2வது நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதுவரை 20ஆக அதிகரித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அங்கு பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மத்திய அரசு தயாராக உள்ளது!
இந்த நிலையில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கவலை தெரிவித்துள்ளார்.
அதில், “வயநாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனது எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும், காயமடைந்தவர்களுடன் உள்ளன. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவுவதற்காக தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கேரள முதல்வர் பினராயி விஜயன் அங்கு நிலவும் சூழ்நிலையை எடுத்துரைத்துள்ளார். அதன்படி சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும் ”நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
வயநாட்டுக்கு உதவ ராகுல் கோரிக்கை!
இதே போன்று வயநாட்டின் முன்னாள் எம்.பியும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தியும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”வயநாட்டில் மேப்பாடு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் சிக்கியவர்கள் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்.
கேரள முதல்வர் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பேசி, மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக உறுதியளித்தார். அனைத்து ஏஜென்சிகளுடனும் ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும், கட்டுப்பாட்டு அறையை அமைக்கவும், நிவாரணப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை எங்களுக்குத் தெரிவிக்கவும் நான் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன்.
மத்திய அமைச்சர்களிடம் பேசி, வயநாட்டுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் நிர்வாகத்திற்கு உதவுமாறு அனைத்து காங்கிரஸ் தொண்டர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கேரளா : அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!
நவம்பர் 1 முதல் படப்பிடிப்பு நிறுத்தம் : தயாரிப்பாளர் சங்கம் – நடிகர் சங்கம் மோதல்!