நிலச்சரிவு ஏற்படும் வரை, இந்திய வானிலை ஆய்வு மையம் வயநாட்டுக்கு சிவப்பு எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்று (ஜூலை 31) உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பதிலளித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 144 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மக்களவையில் இன்று நிலச்சரிவு குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “கடந்த ஜூலை 23ஆம் தேதி கேரள மாநிலத்துக்கு நாங்கள் எச்சரிக்கை விடுத்தோம். சம்பவத்திற்கு ஏழு நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை கொடுத்தோம் என்பதைத் தெரியப்படுத்துகிறேன்.
ஜூலை 24, 25 ஆகிய தேதிகளில் மீண்டும் எச்சரிக்கை கொடுத்தோம். ஜூலை 26-ம் தேதி 20 செ.மீ.க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கை விடப்பட்டது.
நிலச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு எனது வழிகாட்டுதலின் படி ஜூலை 23 அன்று 9 என்.டி.ஆர்.எப் குழுக்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டன.
ஆனால் கேரள அரசு என்ன செய்தது? மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டார்களா? அப்படியானால் உயிரிழப்புகள் எப்படி ஏற்பட்டது” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துள்ள பினராயி விஜயன், “இந்திய வானிலை மையம் வயநாட்டுக்கு சிவப்பு எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை. 6 முதல் 20 செமீ அளவு மழை பெய்யக்கூடிய ஆரஞ்சு அலர்ட் மட்டுமே விடுத்தது. ஆனால் 24 மணி நேரத்தில் 500 மிமீ அதி கனமழை பெய்தது. நிலச்சரிவு ஏற்பட்ட பிறகு தான் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், இந்திய புவியியல் ஆய்வு மையமும், நீர் ஆணையமும் முறையான எச்சரிக்கை எதுவும் கொடுக்கவில்லை. கேரள மாநில அரசு கேட்ட பிறகு தான் தேசிய பேரிடர் மீட்புபடை அனுப்பி வைக்கப்பட்டது.
வயநாட்டில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. முண்டக்காய் மற்றும் சூரல்மலை பகுதிகள் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளது. இந்த இரண்டு இடங்களும் நிலச்சரிவில் முற்றிலும் அழிந்துவிட்டன.
79 ஆண்கள் மற்றும் 64 பெண்கள் என இதுவரை 144 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது வரை 191 பேரை காணவில்லை. இது ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டிக்கொள்ளும் நேரமல்ல.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஃபேக் சர்டிபிகேட்: பூஜா கெட்கர் ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து… யுபிஎஸ்சி அதிரடி!
ஆளுநர் பதவி நீட்டிப்பா? நான் ஜனாதிபதி இல்லை… ஸ்டாலின் பதில்!