நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் குறித்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் பேசினார்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கும் நிலையில் தற்போது வரை 215 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தவிர 143 உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 1300க்கும் மேற்பட்ட மீட்பு படைகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக வயநாடு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஆறாவது நாட்களாக இன்றும் மீட்பு பணி நடைபெற்றது. இன்னும் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என்று அவர்களது உறவினர்கள் கண்ணீருடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் கேரளத்தைச் சேர்ந்தவரும், சிறுபான்மையினர் நலத் துறைக்கான மத்திய இணை அமைச்சருமான ஜார்ஜ் குரியன் இன்று (ஆகஸ்ட் 4) டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
அப்போது வயநாட்டில் நடந்தது குறித்து பிரதமர் மோடியிடம் விவரித்த ஜார்ஜ் குரியன், நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் குறித்தும் தெரிவித்தார்.
வயநாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த அறிக்கையையும் பிரதமர் மோடியிடம் சமர்ப்பித்தார்.
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வரும் நிலையில், பிரதமர் மோடியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வயநாடு மக்களின் மீட்பு பணிக்காக தமிழ்நாடு சார்பில் பொதுப்பணிகள் துறை அமைச்சர் எ.வ.வேலு 5 கோடி ரூபாய்கான காசோலையை கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எத்தனை அறிக்கை கொடுத்தாலும் எல்லாம் குப்பைக்கூடைக்குதான் போகும்