தலைமைச்செயலகத்தில் இன்று (அக்டோபர் 25) நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தூர்தர்ஷன் தமிழ் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா மற்றும் இந்தி மாத நிறைவு விழா கடந்த வாரம் நடைபெற்றது.
ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி மட்டும் புறக்கணித்து பாடிய சம்பவம் பெரும் விவாதப்பொருளாக மாறியது.
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆளுநருக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து மாநிலத்தில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி தலைமையில் இன்று காலை ஆய்வு கூட்டம் தொடங்கியது.
அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது சில வார்த்தைகளை தவறாக பாடப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக ஆய்வுக்கு பின்னர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “தமிழ்த்தாய் வாழ்த்தை யாரும் தவறாக பாடவில்லை. டெக்னிக்கல் கோளாறு தான். மைக் வேலை செய்யாததால் இரண்டு, மூன்று இடங்களில் சரியாக குரல் கேட்கவில்லை. எனினும் மீண்டும் ஒரு முறை தமிழ்த்தாய் வாழ்த்து சரியாக பாடப்பட்டது. அதன்பின்னர் தேசிய கீதமும் சரியாக பாடப்பட்டது. தேவையில்லாமல் மீண்டும் பிரச்சனை கிளப்பி விடாதீர்கள்” என்று உதயநிதி பதிலளித்து சென்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கோவையில் இருந்து தொடங்கும் கள ஆய்வு : ஸ்டாலின் அறிவிப்பு!
“வதந்தியை கிளப்புவர்கள் மெச்சூரிட்டி இல்லாதவர்கள்” : ஜெயம் ரவி காட்டம்!