Priyanka Gandhi furious response to Modi

காங்கிரஸ் தாலியை பறிக்குமா? : மோடிக்கு பிரியங்கா காந்தி ஆவேச பதிலடி!

அரசியல் இந்தியா

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலி உட்பட நகைகளை எல்லாம் பறித்துக் கொள்ளும் என்று பிரதமர் பேசியதற்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

நாட்டில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன.

அண்மையில் தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தானில் பேசிய பிரதமர் மோடி, ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பெண்களின் தாலியை கூட விட்டு வைக்காது. அனைத்தையும் பறிமுதல் செய்து அதை இஸ்லாமியர்களுக்கு அளித்துவிடுவார்கள். இதுதான் அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது” என கூறியிருந்தார்.

மோடியில் இந்த பேச்சு  மிகப் பெரிய சர்ச்சையை எழுப்பியது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெங்களூரில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அவர், “பிரதமர் மோடி திடீரென 400 சீட்களுக்கு மேல் வென்று அரசியலமைப்பை மாற்றுவோம் என்று  கூறுகிறார். திடீரென சில சமயம் தன்னை எதிர்க்கட்சிகள் அவமானப்படுத்துவதாக கூறுகிறார். அல்லது திடீரென சில சமயம் மதம் பற்றி பேசுகிறார்.

உலகின் மிகவும் சிறந்த நகரங்களில் ஒன்றான பெங்களூரில் வசிக்கும் நீங்கள் சொல்லுங்கள்.. உங்களுக்கு இது போன்ற ஒரு தலைவர் தான் வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அவர் “கடந்த இரண்டு நாட்களாக, உங்கள் தாலி மற்றும் தங்கத்தை காங்கிரஸ் பறிக்க விரும்புவதாக சிலர் கூறி வருகிறார்கள்.

நான் ஒன்றை மட்டும் கேட்கிறேன்.. நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகிறது. அதில் 55 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்தது. அப்போது காங்கிரஸ் யாருடைய தங்கத்தையாவது பறித்துள்ளதா? ஆனால் பாஜகவும் மோடியும் அப்படியில்லை.

பணமதிப்பு நீக்கம் நடந்தபோது பெண்களின் சேமிப்பு காலியானது. அப்போது பெண்கள் தங்கள் தாலியை அடமானம் வைத்தனர். அப்போது பிரதமர் மோடி எங்கே இருந்தார்?

வேளாண் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில், 600 விவசாயிகளை கொன்று அவர்களின் மனைவிகளின் தாலியை அறுத்தவர் மோடி. அவர்களின் தாலி பற்றி நினைத்தாரா?

மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைபட்டாரா?

ஆனால் 55 ஆண்டுகளில் காங்கிரஸ் யாருடைய தாலியையும் பறிக்கவில்லை. போர் நடந்தபோது,​​ இந்திரா காந்தி தனது தாலி உட்பட அனைத்து தங்கத்தையும் நாட்டிற்காக தியாகம் செய்தார். என் தாயின் தாலி இந்த நாட்டிற்காக தியாகம் செய்யப்பட்டது.

பெண்களின் வலியையும், போராட்டத்தையும் புரிந்து கொள்ளாமல், இதுபோன்ற முட்டாள்தனமான கூற்றை சிலர் வெளியிடுகின்றனர். தாலியின் மதிப்பு சிலருக்கு புரியவில்லை. தாலியின் முக்கியத்துவத்தை மோடி புரிந்து கொண்டிருந்தால், அவர் இப்படி பேசியிருக்க மாட்டார்.” என்று பிரியங்கா காந்தி பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோப ஜெமா

ஹெல்த் டிப்ஸ்: கோடையைக் குளுமையாக்க இதைச் சாப்பிட்டால் போதும்!

பியூட்டி டிப்ஸ்: எண்ணெய் வடியும் முகத்துக்கு இதோ தீர்வு!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *