வார் ரூம் ரகசியங்கள்: அமர் பிரசாத்துக்கு எதிராக  மாரிதாஸ்

அரசியல்

தமிழக பாஜகவில் தனிப்பட்ட பிரமுகர்களுக்கு இடையிலான மோதல்கள் சில வருடங்களாக மிகவும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. அதன் அடுத்த கட்டமாக  பாஜகவுக்கு வெளியே  இருந்து அக்கட்சியை தீவிரமாக ஆதரிக்கும் யு ட்யூபர் மாரிதாஸ், தமிழக பாஜகவின் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்  பிரசாத்  ஆகியோருக்கு இடையே மோதல் முற்றியிருக்கிறது.

மாரிதாஸ் பாஜகவுக்கு ஆதரவாக, திமுகவுக்கு எதிராக பல்வேறு வீடியோக்களை, கருத்துகளை வெளியிட்டவர். இதற்காக சிறைக்கும் சென்று வந்தவர். அமர் பிரசாத், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவராக இருப்பவர். இந்த இருவருக்கு இடையே நடக்கும் மோதல் பாஜகவில் புயலாக உருவெடுத்துள்ளது.

அண்மையில் பாஜகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக தளங்களில்  ஆபாசமாக பரப்பினர். இதைக் கடுமையாக எதிர்த்த மாரிதாஸ், “காயத்திரி மீது அநாகரிகமாகப் பதிவுகளை வெளியிடுவதைக் குறிப்பிட்ட பிரிவினர் உடனடியாக நிறுத்த வேண்டும்.

கருத்து வேறுபாடுகளுக்கு எதிர்ப்பை தெரிவிப்பதில் குறைந்த பட்ச நாகரீகம் கூட இல்லை. இதைச் சகித்துக் கொள்ளமுடியாது. நீங்கள் செய்வது விமர்சனமல்ல, கொலை. அதுவும் உங்களை நம்பி பயணித்தவர்” என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக பாஜக பிரமுகர் ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதுடன் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஒரு  யுட்யூப் சேனலில்  அமர் பிரசாத் பேட்டியளித்தபோது  மாரிதாஸின் இந்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமர் பிரசாத்,  “மாரிதாஸ் முதல்ல கட்சியில் சேர்ந்து ஒரு பதவி வாங்கிக் கொண்டு அதன் பிறகு இதெல்லாம் சொல்லட்டும், சரியா?  பிஜேபிக்கு எல்லாரும் அட்வைஸ் பண்ண முடியாது” என்று பதிலளித்திருந்தார்.

இதனால் கோபப்பட்ட மாரிதாஸ்,   “நீங்க யாருக்கும் வலது கையா இல்ல இடது கையா இருங்க! உன் தலைவனை குளிர்விப்பதற்கு என் மீது மரியாதைக் குறைவான கருத்தைப் பொதுவெளியில் தமிழக திடீர் பாஜக நிர்வாகிகள் விமர்சனம் வைத்தால் பதிலுக்கு நான் பேச வேண்டியது அவசியமாகிறது.

உரிய தலைமை நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ரியாக்ட் செய்தார். இதையடுத்து அமர் பிரசாத்திடம் இருந்தோ பாஜக தலைமையிடம் இருந்தோ எந்த ரியாக்‌ஷனும் வராததால் அமர் பிரசாத் மீதான தாக்குதல்களைத் தொடங்கிவிட்டார் மாரிதாஸ்.

பிப்ரவரி 5 ஆம் தேதி இரவு மாரிதாஸ் வெளியிட்ட வீடியோவில்,

War Room Secrets Maridhas

அமர் பிரசாத் என்கிற வார் ரூம் ரெட்டி ஆறேழு முறை என்னை சந்திக்க நேரம் கேட்டார். சென்னையில் ஒரு முறை என் வீட்டுக்கு வந்தார்.  அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்த விஷயங்களை எல்லாம் வெளியே சொல்ல விரும்பவில்லை.

அப்படி சொன்னால் ஒட்டுமொத்த பாஜகவே கொந்தளித்துவிடும்.  அதனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் வெளியே சொல்கிறேன். ’தமிழ்நாட்டை தாண்டிட்டா எல்லாமே ரெட்டிதானே?’னு என்கிட்ட சொன்னாரு. இது மாதிரி  மொழி நடை அரசியலில் கெட்ட வார்த்தை. கே.என்.நேருவும் ரெட்டியார்தான் அவர் இப்படியா பேசுகிறார்? இதெல்லாம்  பாஜக மேலிடத்தில் சொல்லியாச்சு. சொல்லி ஒண்ணும் நடவடிக்கை இல்லை என்பதாலதான் இங்கே சொல்லிக்கிட்டிருக்கேன்.

அமர் பிரசாத் ரெட்டியின் குறிக்கோள்….என்ன? கருணாநிதிக்கிட்ட  பொக்கே கொடுப்பார். ஸ்டாலினை பார்ப்பார். ஓபிஎஸ், ஈபிஎஸை பார்க்கிறார். எல்லா இடத்திலும் செல்வார் அமர் பிரசாத்.  ஆருத்ரா கோல்டு  மோசடியில் ஈடுபட்ட ஹரிஷை கட்சியில் சேர்த்து தன் பிரிவில் பதவியும் பெற்றுக் கொடுத்தார் அமர் பிரசாத்.

இதையெல்லாம் தெரிந்து மக்கள் காரித் துப்ப மாட்டார்களா? அதுபற்றி அப்போது பத்திரிகையாளர் கேட்டபோது  இது திமுகவின்  பழி வாங்கும்  நடவடிக்கை என்றார். பாஜக என்பதால் இதையெல்லாம்  சகித்துக் கொண்டு கடந்து செல்ல முயற்சி செய்தோம். ஆனால் என்னையே கடிக்க வந்துவிட்ட பிறகு, இந்த மோசமான கிருமியை விடுவதாக இல்லை.  

அந்த பேட்டியில்   என்னைப் பற்றி பேசிய பிறகு நான் ரியாக்ட் செய்தேன். அதற்கு  அவர்,  ‘ப்ரதர் உங்களைப் பற்றி நான் தவறாக பேசவில்லை, முழு வீடியோவையும் பாருங்கள்’  என்று மெசேஜ் அனுப்புகிறார்.  இது பிப்ரவரி 5 காலை 9.39 க்கு. அடுத்த ஒரு நிமிடத்தில் 9.40 க்கு ட்விட்டரில், ‘நம் தலைவர் அண்ணாமலை அவர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ எதிர்த்தால்  நான் அவர்களை உறுதியாக எதிர்ப்பேன்.

அவர் என் நீண்ட கால நண்பராக இருந்தாலும் சரி…’ என ட்விட் போடுகிறார். அதாவது எனக்கு அனுப்பிய தனிப்பட்ட மெசேஜில் பம்முகிறார். ஆனால் ட்விட்டரில் நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான் என்று உதார் விடுகிறார். அமர் பிரசாத் ரெட்டி பற்றியும் அவரது நிறுவனம் பற்றியும் வார் ரூம் பற்றியும் பேசுவதை தவிர்க்குமாறும் அவ்வாறு பேசினால் கட்சிக்குதான் அவப் பெயர் என்றும் சில பெரியவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதால்  நான் அவற்றைப் பற்றி இப்போது பேசவில்லை.  

War Room Secrets Maridhas

அமர் பிரசாத் என்னைப் பற்றி கூறியதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையென்றால்  இந்த வீடியோவுக்கு இரண்டாம் பாகம் வெளியிடுவேன்” என்று டேபிளை தட்டி வீடியோவை முடித்திருக்கிறார் மாரிதாஸ்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வலது கரமாக சொல்லப்படும் அமர் பிரசாத் ரெட்டியை  குறி வைத்திருக்கிறார்  மாரிதாஸ். இந்த பிரச்சினையில் அண்ணாமலை தலையிட்டு சமரம் செய்யவில்லை என்றால்…    தன் அடுத்த வீடியோவில்  பாஜகவுக்காக அமர் பிரசாத் ரெட்டி செய்யும் வார் ரூம் ரகசிய வேலைகளை வெளியிடுவார் மாரிதாஸ்  என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியிலேயே ஏற்பட்டுள்ளது.

வேந்தன்

ஈரோடு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தரப்பு வாபஸ்!

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

+1
0
+1
5
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *