தமிழ்நாடு வக்பு வாரியத்தின் ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்கும் நடவடிக்கையில் சமரசமில்லாமல் ஈடுபட்டு வருவதால் சிலர் அவதூறுகளையும் குற்றச்சாட்டுக்களையும் தன் மீது சுமத்துவதாக வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
சென்னை வக்பு வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அப்துல் ரகுமான்,
“முன்னெப்போதும் இல்லாத வகையில் வக்பு வாரிய சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் நடவடிக்கையில் வாரியம் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் இதுவரை ரூ.2000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த வாரம் பல சவால்களுக்கு மத்தியில் சென்னையில் உள்ள ஃபோர்ஷோர் எஸ்டேட்டில் உள்ள சொத்துக்களை வக்பு வாரியம் மீட்டது.
வாரிய சொத்துக்களை சமரசமில்லாமல் மீட்டு வருவதால் சிலர் என் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் அவர்கள் காவல் நிலையம் சென்று புகார் அளிக்க தயாராக இல்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அஜ்மல் கான் என்ற வழக்கறிஞர் வக்பு வாரியத்தில் ரூ.2000 கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக வழக்கு தொடர்ந்தார்.
இந்த புகார் குறித்து விசாரிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக வாரியம் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது” என்றார்.
திருநெல்வேலியில் வாரியத்திற்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை ஒப்பந்த அடிப்படையில் பெண் ஒருவருக்கு வழங்க முத்தவல்லிக்கு உத்தரவிட்டதாக எழுந்த புகார் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,
“வாரிய சொத்துக்கள் மூலம் வருவாய் ஈட்ட விரும்புகிறோம். விதிகளின் படி குத்தகைதாரர்களுக்கு நிலம் கொடுப்பதில் தவறில்லை.
வாரியத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்ததற்காக முத்தவல்லி மீது விசாரணை நடைபெற்று வருவதால், ஒரு வருடத்திற்கு முன்பாக நிலம் வாங்கிய சம்பவத்தை அவர் தற்போது பேசுபொருளாக்கியிருக்கிறார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்: தமிழ்நாட்டின் கோரிக்கைகள் என்ன?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ட்வீட்: பாஜக தலைவர்கள் பரபரப்பு கருத்து!