வக்ஃப் வாரிய மசோதாவுக்கு அவசர ஒப்புதல்… ஜேபிசி தலைவரை கடுமையாக விமர்சித்த ஆ.ராசா

Published On:

| By christopher

a raja waqf

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் நடவடிக்கை கேலிக்கூத்தானது என திமுக எம்.பி ஆ.ராசா விமர்சித்துள்ளார்.

கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பாஜக அரசு கொண்டு வந்த வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து, மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான இக்குழு பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் சென்று ஆய்வுகளை நடத்தியது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற ஆய்வுக்குழு கூட்டத்தில் திமுகவின் ஆ.ராசா, எம்.எம்.அப்துல்லா உள்ளிட்ட 10 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை இறுதி செய்யப்பட்டதாக ஜெகதாம்பிகா பால் அறிவித்துள்ளார்.

இதற்கு எதிர்க்கட்சியினரும், இஸ்லாமிய அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை இன்று திமுக எம்.பி. ஆ.ராசா, ’இப்படியொரு கேலிக்கூத்து நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை நடந்திருக்க வாய்ப்பில்லை’ என தெரிவித்துள்ளார்.

காவி வண்ணம் பூசும் பெயிண்டர்!

அவர் மேலும் பேசுகையில், “நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் முடிவெடுப்பதற்கு இன்னும் கால நிபந்தனை உள்ளது.

இன்று நடந்த கூட்டத்தில், பல்வேறு மாநிலங்களில் நடந்த ஆய்வுக்கூட்டத்தின் தீர்மானங்களை தர சொல்லிக் கேட்டோம். அதற்கு, ’அதெல்லாம் வரும். உங்களுடைய பரிந்துரைகளை மட்டும் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள்.

சரியென்று நாங்கள் பரிந்துரைகளை சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ‘எதிர்க்கட்சி எம்.பிக்களான எங்கள் 10 பேரின் பெயரை சொல்லி, அவர்களுடைய பரிந்துரைகள் மீது ஓட்டெடுப்பு நடைபெறுவதாக அறிவித்து, பின் அவை ஏற்கப்படவில்லை என்று ஜெகதாம்பிகா பால் அறிவித்தார். இதனால் எங்களது நூற்றுக்கணக்கான பரிந்துரைகள் சட்டவிரோதமாக நிராகரிக்கப்பட்டது.

நாடாளுமன்ற வரலாற்றில் இப்படியொரு கேலிக்கூத்தான கூட்டுக்குழு ஆய்வு நடந்திருக்க வாய்ப்பில்லை.

மத்திய அரசின் இசைக்கு நடனமாடுகிற நடிகராக நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவராக ஜகதாம்பிகா பால் இருக்கிறார். இதை அவரிடமே கூறிவிட்டு வந்தோம். இந்திய நாட்டிற்கு காவி வண்ணம் பூசுவதற்கு ஒரு நல்ல பெயிண்டராகவும் ஜேபிசி தலைவர் செயல்படுவது வருத்தத்திற்குரியது.

மசோதா அமலானால் என்ன நடக்கும்?

வக்ஃப் வாரிய சொத்துகளை கொள்ளையடிப்பதற்காக தான் இந்த திருத்தங்களை கொண்டு வந்துள்ளார்கள்.

வக்ஃப் சொத்தில் மூன்று வகை உள்ளது. அதில் ஒன்று எதிரிகள் சொத்து. அதாவது பாகிஸ்தான் பிரிந்தபோது, இந்தியாவில் இருந்து சென்றவர்கள் தங்களுடைய சொத்துகளை ‘அல்லாவின் சொத்து’ என கூறி சென்று விட்டார்கள். வக்ஃப் வாரியத்தை பொறுத்தவரை எழுதிக்கொடுக்காமல் வாயால் சொன்னாலே போதும். அதனால் அப்படி வந்த பல சொத்துகளுக்கு ஆவணங்களே இருக்காது.

மற்றொன்று நீண்ட பயன்பாட்டு அடிப்படையில் உள்ள சொத்துகள். மூன்றாவது எழுதி வைத்த சொத்துகள்.

வக்ஃப் வாரியத்தில் உள்ள கிட்டத்தட்ட 60 சதவீத சொத்துகளுக்கு ஆவணங்கள் இல்லை. அதற்கு யாரும் இதுவரை உரிமை கொண்டாடியதில்லை. தற்போது கொண்டு வரப்படும் சட்டத்திருத்தத்தின் மூலம் அவற்றை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும்.

நாங்கள் நியாயமாக நடந்துகொள்கிறோம் என்று காட்சிப்படுத்துவதற்காக தான் இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. மேலும் ஏப்ரல் 4ஆம் தேதி வரை காலக்கெடு உள்ள நிலையில், டெல்லி தேர்தலில் இந்து மக்களை கவர்வதற்காக தற்போது அவசர அவசரமாக ஒப்புதல் அளித்துள்ளனர்” என ஆ.ராசா தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share