தமிழக முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம், தனது சுய சரிதைப் புத்தக வெளியீட்டு விழாவிற்கு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அழைப்பு கொடுத்துள்ளார்.
தமிழக முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம், தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளை முடித்துவிட்டு, இராணுவப் பணியில் சேர்ந்தவர். அதன் பிறகு, தமிழகத்தில் டிஐஜியாக பதவியேற்றார்.
அந்த காலகட்டத்தில் நக்சல் அமைப்புகள் பழைய வட ஆற்காடு மாவட்டத்தில் அடர்த்தியாக இருந்த நிலையில், துப்பாக்கி முனையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் தேவாரம். மேலும், வீரப்பனைப் பிடிக்க (எஸ்.டி.எஃப்) சிறப்பு அதிரடி படையை உருவாக்கினார்.
வால்டர் தேவாரம் தனது வாழ்க்கைப் பயணத்தை கேரளா மூணாறு பகுதியில் தொடங்கி, சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள வெள்ளை மாளிகையில் டிஜிபியாக பதவியேற்று தனது காவல்துறை பதவிக் காலத்தை நிறைவு செய்தார்.
இந்த காலகட்டத்தில், தான் சந்தித்த சாதனைகள், சோதனைகள், துரோகங்கள், அவமானங்கள் அனைத்தையும் இப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
அதனால்தான்,புத்தகத்தின் தலைப்பை ‘மூணாறில் இருந்து மெரினா வரை’ என்று வைத்திருக்கிறார். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் இப்புத்தகம் வெளியாகிறது.
அதில் பல அதிகாரிகளைப் பாராட்டி பெயரைக் குறிப்பிட்டுள்ளார். சிலரை பெயரைக் குறிப்பிடாமல் விமர்சனமும் செய்துள்ளார்.
இந்த புத்தக வெளியீட்டு விழா இன்று பிப்ரவரி 25-ஆம் தேதி சென்னை எழும்பூர் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ஆபீசர்ஸ் மெஸ் வளாகத்தில் நடைபெறுகிறது.
புத்தகத்தை வெளியிடுபவர் முன்னாள் ஐ.பி. இயக்குநர், முன்னாள் மேற்கு வங்காள ஆளுநர், முன்னாள் பாதுகாப்புத்துறை ஆலோசகரான எம்.கே.நாராயணன்.
நிகழ்ச்சியில் முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் ஆர்.கே.ராகவன், இன்னும் முன்னாள் இன்னாள் டி.ஜி.பி-கள், தமிழகம் உட்பட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் பங்கேற்கிறார்கள்.
வால்டர் தேவாரத்தின் புத்தகத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்ற எதிர்பார்ப்பில் காவல்துறை, அரசியல் வட்டாரமே ஆவலோடு காத்திருக்கிறது.
–வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்காக குரல் கொடுப்பவர் கனிமொழி: பாராட்டிய ஸ்டாலின்
இந்த மாடல் பைக்குகள் இனி கிடையாது… ஷாக் கொடுத்த யமஹா நிறுவனம்!
Comments are closed.