ராமேஸ்வரத்தில் இருந்து நடை பயணத்தை தொடங்க இருப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் 9 ஆண்டுகள் சாதனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இன்று (மே31) மதுரைக்கு வந்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,
“ஜூலை 9ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து நடை பயணம் ஆரம்பிக்க உள்ளோம். அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
முறைப்படி விரைவில் தெரியப்படுத்த உள்ளோம். ஆறு மாத காலம் நடை பயணம் குறித்து முழு விவரத்தையும் தெரியப்படுத்த உள்ளோம். இந்த நடை பயணத்தில் தேசிய தலைவர்களும் பங்கேற்பார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இலாகா மாற்றம் என்பது மதுரை மண்ணிற்கு திமுக அரசு செய்த துரோகம்.
பிடிஆர் பேசியது உறுதிப்படுத்தப்பட்ட ஆடியோ தான். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை.
அவர் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். திமுக அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்க வேண்டும்.
அதற்கு பதிலாக அமைச்சர் பி டி ஆரின் இலாகா மாற்றப்பட்டிருப்பது இந்த திராவிட மாடல் அரசில் யாருக்கும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு ஒரு உதாரணம்” என்றார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டது பற்றிய கேள்விக்கு,
“எந்த ஒரு முதல்வரும் வெளிநாடு பயணம் செல்வது வரவேற்க வேண்டியது தான். தமிழ்நாடு பற்றி அனைத்து மாநிலங்களும் வெளிநாடுகளும் தெரிந்து கொள்ளட்டும். முதல்வர் மட்டும் வெளிநாடு செல்லவில்லை, அதிகாரிகளும் உடன் சென்றிருக்கிறார்கள்.
முதல்வரின் வெளிநாட்டு பயணம் தமிழ்நாட்டிற்கு ஒரு ஆகச் சிறந்த பயணமாக மாற வேண்டும் என்பது எனது ஆசை.
உலகத்தில் அதிகமான முதலீடுகள் கவரக்கூடிய நாடாக இந்தியா மாறி உள்ளது. இதற்கு முழுவதும் பிரதமர் மோடியே காரணம். பிரதமர் மோடியை வைத்து முதலீடுகளை தமிழக முதல்வர் கவர வேண்டும்.
நியூ பப்பு குனியா முதல் அமெரிக்கா வரை ஒரே பிராண்ட் பிரதமர் மோடிதான். முதல்வரின் வெளிநாடு பயணம் ஆக்கப்பூர்வமானதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறினார் அண்ணாமலை.
டாக்டரை குத்திய நோயாளி: ஐசியூ வாசலில் ஆயுதம் ஏந்திய போலீஸாரை நிறுத்தக் கோரிக்கை!
’செங்கோலை வைத்து திசைதிருப்பும் பாஜக’: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு!