“ஸ்வீட் பாக்ஸுக்காக காத்திருக்கிறேன்” : ஸ்டாலின் வாழ்த்துக்கு ராகுலின் சுவாரஸ்ய பதிவு!

Published On:

| By Kavi

பிறந்தநாளுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த நிலையில், ஸ்வீட் பாக்ஸுக்காக காத்திருக்கிறேன் என்று ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூன் 19) தனது 54ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோருடன் கேக் வெட்டி கொண்டாடினார் ராகுல் காந்தி.

ராகுல் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை மண்ணடி, காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

சென்னை மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருத்தகை உள்ளிட்டோர் பிரார்த்தனை செய்தனர். சென்னை அண்ணா சாலை தர்காவிலும் பிரார்த்தனை செய்தனர்.

சத்தியமூர்த்தி பவனில் பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடினர்.

தொடர்ந்து, வறுமையில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு பண உதவியும் அளிக்கப்பட்டது. பல்நோக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

அரசு பொது மருத்துவமனைக்கு ரத்தானம், ஏழை எளிய மக்களுக்கு பண உதவி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறை சார்பாக மூத்த காங்கிரஸ் நிர்வாகிக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் போது இசையமைப்பாளர் ஸ்டீபன் இசையமைத்த ராகுல்காந்தி குறித்தான பாடலை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டார்.

இப்படி நாடு முழுவதும் காங்கிரஸ் அலுவலகங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில், ராகுல் காந்திக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பான சகோதரரே… நம் நாட்டு மக்களுக்கான உங்களின் அர்ப்பணிப்பு உங்களை உயரத்திற்கு அழைத்துச் செல்லும். நீங்கள் தொடர்ந்து முன்னேறவும் வெற்றியடையவும் வாழ்த்துக்கள்” என்று ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதனுடன் ராகுல் காந்தி நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கோவை வந்திருந்த போது முதல்வர் ஸ்டாலினுக்காக ஒரு பேக்கிரியில் இனிப்பு வாங்கிய வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.

அந்த வீடியோவில, “அவர் வழங்கின இனிப்பு… எதிர்க்கட்சிகள் குறித்தான கணிப்புகளை பொய்யாக்கியது” என்று ஸ்டாலின் பேசியது இடம் பெற்றிருந்தது.

இந்த ட்வீட்டை பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி. உங்களிடமிருந்து எனது ஸ்வீட் பாக்ஸுக்காக காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

கள்ளச்சாராயம் விற்பனை: பறிபோன உயிர்கள்… கலெக்டர் பணியிட மாற்றம்!

அதிமுகவை காப்பாற்றியது யார்? சசிகலாவுக்கு எடப்பாடி பதிலடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share