காத்திருந்து காத்திருந்து… பாஜக இல்லாத புதிய கூட்டணி அமைத்த எடப்பாடி

அரசியல்

அதிமுகவின் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுகவின் தேர்தல் பணிமனை திறப்பு விழா இன்று (பிப்ரவரி 1) காலை ஈரோடு ஜி.ஹெச்.ரவுண்டானா அருகே நடந்தது. இதில் முக்கியமான முடிவாக பாஜக அல்லாத அதிமுக கூட்டணி என்ற மெசேஜ் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் பணிமனையை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். இதன் பின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேச ஆரம்பித்த சில நிமிடங்களில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது செல்போனை வேலுமணியிடம் கொடுத்து, ‘வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டார். நீங்களே சொல்லிடுங்க’ என்று கூறுகிறார்.

அப்போதுதான் வேலுமணி, “நமது வெற்றி வேட்பாளரை எடப்பாடியார் அறிவித்துவிட்டார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசுவை வேட்பாளராக அறிவித்துள்ளார்’ என்று கூறி தென்னரசுவை அழைத்து அறிமுகப்படுத்தி வைக்கிறார். தொடர்ந்து பேசிய வேலுமணி, ‘வேட்பாளர் தென்னரசுவை ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும்” என்று பேசினார்.

பிறகு தங்கமணி, நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி என பலரும் வாழ்த்தி பேசினார்கள். ஆரம்பத்தில் இருந்தே மேடை முகப்பைச் சுற்றி கூட்டம் திரண்டிருந்ததால் மேடையின் முகப்பு பேனரில் என்ன எழுதியுள்ளார்கள் என்பது நிகழ்ச்சி ஆரம்பித்த சில நிமிடங்கள் கழித்தே தெரிந்தது. அதாவது தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற புதிய கூட்டணியின் பெயர் அந்த பேனரில் எழுதப்பட்டிருந்தது.

அதிமுக வேட்பாளரை நிறுத்தும் என்றும், அதற்கு பாஜக ஆதரவளிக்க வேண்டும் என்றும் முன்பே எடப்பாடி பழனிசாமி தரப்பில் துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி தலைமையிலான குழுவினர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தேடிச் சென்று சந்தித்து வேண்டுகோள் வைத்தனர். ஆனால் தமிழக பாஜக தலைவரிடம் ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்து ஆதரவு கேட்டார். மேலும், பாஜக போட்டியிட்டால் தாங்கள் போட்டியிட மாட்டோம் என்றும் பன்னீர் தெரிவித்தார்.

இந்த நிலையில் நாட்கள் கடந்ததே தவிர பாஜக தன் முடிவை அறிவிக்கவில்லை. இதற்கிடையே பாஜகவே ஈரோட்டில் போட்டியிட்டால் என்ன என்று யோசித்த அண்ணாமலை அந்தத் தொகுதியில் திடீர் சர்வே நடத்தினார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வென்ற தொகுதியான மொடக்குறிச்சி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அருகேதான் உள்ளது. இந்த அடிப்படையில் பாஜகவின் வேட்பாளரை நிறுத்தினால் என்ன என்று திட்டமிட்ட அண்ணாமலை பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தத்தை இதற்காகவே டெல்லிக்கு அனுப்பினார். டெல்லி தலைமையோ, கட்சி வளரும் என்றால் போட்டியிடுங்கள் என்று கூறிவிட்டது. ஆனால் நேற்று (ஜனவரி 31) நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்திலும் அதிமுகவுக்கு ஆதரவு குறித்தோ, தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ பாஜக எந்த முடிவையும் மேற்கொள்ளவில்லை.

மேலும் அந்த கூட்டம் முடிந்து செய்தியாளார்களிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் திருப்பதி நாராயணன், “ ஈரோடு கிழக்கு தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எங்கள் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும். அதுபற்றி கவலையில்லை” என்று தெரிவித்தார். இது எடப்பாடி பழனிசாமியை டென்ஷன் ஆக்கிவிட்டது.

இனியும் அவர்களுக்காக காத்திருந்தது போதும் என்று முடிவெடுத்த எடப்பாடி பழனிசாமி… தேர்தல் பணிமனைத் திறப்பு விழாவை பிப்ரவரி 1 ஆம் தேதி நடத்த ஏற்கனவே திட்டமிட்ட நிலையில், அந்த நிகழ்ச்சியின் பேனரில், ‘தேசிய ஜனநாயக கூட்டணி’ என்ற பெயரை எழுதவே நேற்று மாலை உத்தரவிட்டார். ஆனால் நேற்று பாஜக கூட்டம் முடிந்தும் பதில் இல்லை. மேலும், ‘அதிமுக காத்திருப்பதைப் பற்றி கவலை இல்லை’ என்று திருப்பதி நாராயணன் கூறியதைக் கேட்டு அதிமுகவினர் டென்ஷனாகிவிட்டனர்.

திடீரென நேற்று இரவே, ‘தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி’ என்ற புதிய பெயரை வைக்க முடிவு செய்திருக்கிறார் எடப்பாடி. பாஜக இடம்பெற்ற கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி என்று இந்திய அளவில் பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தன் தலைமையில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற புதிய கூட்டணியை அமைத்திருக்கிறார்.

இந்த பேனரில் பாஜக தலைவர்கள் படம் எதுவும் இல்லை. மாறாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, புதிய பாரதம் கட்சியின் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோரது படங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் பாஜக இல்லாமல் எடப்பாடி பழனிசாமி புதிய கூட்டணி அமைக்கும் முயற்சியை இந்த தேர்தல் பணிமனை திறப்பு விழா தெளிவாக எடுத்துச் சொல்கிறது.

ஏற்கனவே அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் ஈரோட்டில் அதை வெளிப்படுத்தியுள்ளார்.

வேந்தன்

காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்களின் லிஸ்ட் இதோ!

+1
0
+1
4
+1
0
+1
5
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *