இவிஎம் விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 24) தீர்ப்பு வழங்க இருந்தது. இந்த நிலையில், நீதிபதிகள் அமர்வு பல்வேறு கேள்விகளை அடுக்கிய நிலையில் வழக்கு மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் வாக்கு இயந்திரத்தில் எண்ணப்பட்டு விட்டதா என்பதை விவிபேட் இயந்திரம் மூலம் வாக்காளர் சரிபார்த்து உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
அதேபோல், தேர்வு செய்யப்பட்ட 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை மட்டும் மொத்த வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கு பதிலாக 100 சதவீத ஒப்புகை சீட்டுகளையும் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டுமென சமூக ஆர்வலர் அருண் குமார் அகர்வால் என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்குகள் மீதான முந்தைய விசாரணையின்போது, “2019 ஆம் ஆண்டு தேர்தலில் தேர்தல் ஆணையத்தில் உள்ள தரவுகளை மாநிலம் வாரியாக பகுப்பாய்வு செய்து பார்த்தபோது, சுமார் 373 தொகுதிகளில் முரண்பாடுகள் இருந்துள்ளதை சில தனியார் நிறுவனங்கள் என கண்டறிந்துள்ளன.
காஞ்சிபுரம், மதுரை, தர்மபுரி ஆகிய மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளுடன், எண்ணிப்பட்ட வாக்குகளுடன் பொருந்தி வரவில்லை” என ஆதாரங்களுடன் மனுதாரர் தரப்பு வாதத்தை முன்வைத்தது.
இதனையடுத்து இழந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 18ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்தது.
இந்த நிலையில், விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று பட்டியலிடப்பட்டதை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அதில் இடைக்கால தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று காலை வந்தது.
நீதிபதிகளின் கேள்விகள்!
அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் செயல்படும் விவகாரங்களில் எங்களுக்கு இன்னும் சில முக்கிய சந்தேகங்கள் இருப்பதாக நீதிபதிகள் இருவரும் தெரிவித்தனர்.
தொடர்ந்து, நீதிபதி சஞ்சீவ் கண்ணா கேள்விகளை அடுக்கினார். அவர், “ நாங்கள் 3-4 கேள்விகளை கேட்க விரும்புகிறோம். முதலில் மைக்ரோ கன்ட்ரோலர் கண்ட்ரோலிங் யூனிட்டில் நிறுவப்பட்டுள்ளதா அல்லது விவிபேடில் உள்ளதா? உள்ளதா?
இரண்டாவது மைக்ரோ கண்ட்ரோலர் ஒரு முறை மட்டுமே நிரல்படுத்தக்கூடியதா? அல்லது அடுத்தடுத்து பயன்படுத்த கூடியதா?
மூன்றாவில் ஒரு மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எத்தனை சின்னங்களை அனுமதிக்க முடியும்?
நான்காவது தேர்தல் மனுக்களுக்கான வரம்பு 30 நாட்கள் என்று கூறப்பட்டது, எனவே தரவு 45 நாட்களுக்கு சேமிக்கப்படுகிறது. ஆனால் RP சட்டத்தின்படி, வரம்பு காலம் 45 நாட்கள். எனவே சேமிப்பிற்கான காலத்தை அதற்கேற்ப அதிகரிக்க வேண்டியிருக்குமா?
ஐந்தாவது கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்பட்டுள்ளதா அல்லது VVPAT தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளதா?
இதற்கெல்லாம் எங்களுக்கு பதில் தேவைப்படுகிறது. எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரியை இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகுமாறு இந்த அமர்வு கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவித்தார்.
அதற்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனிந்தர் சிங் உறுதியளித்ததை தொடர்ந்து வழக்கு மதியம் 2 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Gold Rate: வேகமா ஏறுவது யார்? வெயிலுக்கும் தங்கத்துக்கும் போட்டி!
விவசாயியை மீட்போம் : சீமான் சொன்ன கரும்பு சேதி!