வி.பி.சிங்கிற்கு தாய் வீடு உத்திர பிரதேசம் என்றால் தந்தை வீடு தான் தமிழ்நாடு என்று சிலை திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். VP singh statue inauguration
முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் உருவச்சிலையை சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 27) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, ”வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கும் மகத்தான வாய்ப்பு கிடைத்ததை எண்ணி இன்றைக்கு நான் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் இருக்கிறேன். வி.பி.சிங்கிற்கு தாய் வீடு உத்திர பிரதேசம் என்றால் தந்தை வீடு தான் தமிழ்நாடு. தந்தை பெரியாரின் பெயரை உச்சரிக்காமல் அவருடைய பேச்சே இருக்காது.
அதனால் தான் அப்படிப்பட்ட தந்தை பெரியாரின் சமூகநீதி மண்ணில் வி.பி.சிங்கிற்கு முதன்முதலாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. வி.பி.சிங்கை இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். முதல் முறை 1988 ஆம் ஆண்டு தேசிய முன்னணியின் தொடக்க விழாவின் போது இளைஞரணியை நான் வழிநடத்தினேன். அப்போது மேடையில் இருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார் வி.பி.சிங். அப்போது அவரிடம் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
பின்னர் அவர் பிரதமரான போது டெல்லிக்கு சென்ற எம்.எல்.ஏ குழுவில் நானும் இருந்தேன். அப்போது ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைக்கும் போது என்னையும் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தனர். வி.பி.சிங் என்னைப் பார்த்து இவரை எப்படி மறக்க முடியும் என்று சிரித்துக் கொண்டே சொன்னார். இவர்தான் சென்னையில் இளைஞரணியை வழிநடத்தினார் என்று மறக்காமல் பாராட்டினார்.
இன்றைக்கு நான் முதலமைச்சராக இருந்து கொண்டு அவருக்கு சிலை திறந்து வைத்துள்ளேன் என்றால் அதை விட என்ன பெருமை எனக்கு வேண்டும்.
காலம்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூகநீதியைத் திறந்து வைத்தவர் வி.பி.சிங். தன்னுடைய பிரதமர் பதவி போனாலும் பரவாயில்லை என்று அதில் உறுதியாக இருந்தவர். அவருக்கு சிலை அமைப்பதை திராவிட மாடல் அரசு கடமையாக கருதுகிறது. வி.பி.சிங் பிரதமராக இருந்தது வெறும் 11 மாதம் தான். ஆனால் அவர் செய்த சாதனை மகத்தானது.
வி.பி.சிங் பிறப்பால் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தை சார்ந்தவர் அல்ல. ஏழை எளிய குடும்பத்தை சார்ந்தவரும் அல்ல. ஆனால் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீட்டைச் சாத்தியப்படுத்திக் காட்டினார்.
பதவியில் இருந்த 11 மாத காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு, தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு தொடக்கப் புள்ளி, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு தொடக்கப் புள்ளி, வேலை உரிமையை அரசியல் சாசன உரிமையாக்கியது, லோக்பால் சட்டத்திற்கு தொடக்க முயற்சிகள், தேர்தல் சீர்திருத்தங்கள், அண்ணல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது, நாடாளுமன்றத்தின் நடுவே அண்ணல் அம்பேத்கர் படம், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில், உழவர்கள் பிரச்சனைகளைத் தீர்க்க மூன்று குழுக்கள், டெல்லி குடிசை பகுதி மக்களுக்கு வாழ்விடங்கள், அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (MRP)அச்சிட உத்தரவு, நுகர்வோர் பாதுகாப்பு என பெரிய பட்டியலே இருக்கிறது.
வி.பி.சிங்கின் முயற்சியால் தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஓரடியாவது முன்னேறி இருக்கிறார்கள். நாம் இன்னும் பல உயரங்களுக்கு செல்ல வேண்டும். நமக்கான உரிமை இன்னும் முழுமையாக கிடைக்காத, கிடைக்க முடியாத சூழல் தானே நிலவுகிறது.
குறிப்பாக சொல்லவேண்டுமானால் கல்வி நிறுவனங்களில் ஓபிசி இட ஒதுக்கீடு 2006-க்கு பிறகு தான் நடைமுறைக்கு வந்தது. பல்கலைக்கழக மானியக்குழு இணை இயக்குநர் பதவிக்கு இட ஒதுக்கீடே கிடையாது, எல்லாமே பொதுப்பிரிவு. ஒன்றிய அரசின் துறை செயலாளர்கள் 89 பேரில் 85 பேர் உயர் சாதியினர். பட்டியலின பிரிவை சார்ந்தவர் ஒரே ஒருவர். பழங்குடியின பிரிவை சார்ந்தவர் 3 பேர் மட்டும் தான். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்கள் ஒருவர் கூட கிடையாது.
ஒன்றிய அரசின் துறைகளின் கூடுதல் செயலாளர் 93 பேரில் 82 பேர் உயர்சாதியினர். பிற்படுத்தப்பட்டோர் கிடையாது. ஒன்றிய அரசின் துறைகளுடைய இணை செயலாளர்கள் 275 பேரில் 19 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டோர். இப்படி தான் பல்வேறு துறைகளிலும் இன்றைக்கும் நிலைமை இருக்கிறது.
நீதிமன்றங்களில் சமூகநீதியின் நிலை என்ன? 2018 முதல் 2023 வரை நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில் 72 பேர் மட்டும் தான் பிற்படுத்தப்பட்ட பிரிவினை சார்ந்தவர்கள். ஆனால் 458 பேர் பொதுப்பிரிவை சார்ந்தவர்கள். உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படவில்லை ஏன்?
இந்த நிலையெல்லாம் மாற்றுவதற்காக தான் நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும். அது தான் வி.பி.சிங் போன்றோருக்கு நாம் செலுத்துகிற உண்மையான புகழ் வணக்கம்.
எங்கெல்லாம் புறக்கணிப்பு, தீண்டாமை, அடிமைத்தனம், அநீதி இருக்கிறதோ, அங்கெல்லாம் அதை முறிக்கின்ற மருந்தாக இருப்பது தான் சமூக நீதி. அந்த சமூகம் தழைக்க வேண்டுமானால் நாம் முன்னெடுக்க வேண்டிய சில முக்கிய பணிகள் சொல்லி நிறைவு செய்கிறேன். தாமதப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு நடத்த வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு முழுமையாக முறையாக வழங்கப்பட வேண்டும். பட்டியலின பழங்குடியின இட ஒதுக்கீடும் முழுமையாக வழங்கப்பட வேண்டும். சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும்.
இதையெல்லாம் அகில இந்திய ரீதியில் கண்காணித்து உறுதி செய்ய அனைத்து கட்சி எம்.பிக்கள் குழு அமைக்கப்பட வேண்டும். அகில இந்திய அளவில் சமூகநீதி ஆர்வம் கொண்ட அனைத்து இயக்கங்களும் இணைந்து மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும்.
வி.பி.சிங் சிலை திறப்பு நாளில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உறுதிமொழி: இந்தியா முழுமைக்கும் வாழும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மை விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கான அரசியல் செயல்திட்டங்களை, அரசின் செயல்திட்டங்களாக மாற்றி அமைக்க இன்றைக்கு உறுதி ஏற்போம்” என்று பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
உதயநிதிக்கு ப்ரமோஷன்- முந்திக் கொண்ட துரைமுருகன்
IPL 2024: ஹர்திக் பாண்டியா மும்பைக்கு வேணாம்… நிராகரித்தாரா கேப்டன் ரோஹித்?
VP singh statue inauguration