வாக்காளர் பட்டியல், அரசியல் நிலவரம் : மகளிரணிக்கு விஜய் உத்தரவு!

அரசியல்

நடிகர் விஜய், தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார். அவர் விரைவில் அரசியலில் கால் எடுத்து வைக்கலாம் என்று கூறப்படும் நிலையில் ஐடி விங், வழக்கறிஞர் அணி என தனி தனி அணியாக ஆலோசனை செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 9)  விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது பெண்கள் விஜய்யை நேரில் தான் பார்க்க முடியவில்லை. வீடியோ காலிலாவது வர சொல்லுங்கள் என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு புஸ்ஸி ஆனந்த், உடனடியாக வீடியோ காலில் வர சொல்ல அவருக்கு நேரம் கிடைக்காது. விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அவர் விரைவில் சந்திப்பார். அதற்கு நான் பொறுப்பு என்று மகளிர் அணியினரை சமாதானப் படுத்தினார்.

தொடர்ந்து இந்த கூட்டத்தில் மகளிர் அணியினருக்கு 20 அறிவுரைகளும், உத்தரவுகளும் வழங்கப்பட்டன.

அவை,
1. இயக்கத்தின் முக்கிய அணிகளில் ஒன்றான மகளிர் அணியின் செயல்பாடுகள் தான் மக்கள் மத்தியில் இயக்கத்தின் மீதான மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தும்.

2. இயக்கத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் மகளிர் அணியின் சிறப்பான பங்களிப்பு இருக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

3. இயக்கத்தின் தலைமை உத்தரவுப்படி நடைபெறும் மக்கள் நலன் செயல்பாடுகளில், நிகழ்ச்சிகளில் மகளிர் அணியினர் பங்கேற்பது முக்கியமானது.

4. குறிப்பாக குருதியகம், விழியகம், மாலை நேரப் பயிலகம் போன்ற சேவை திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்ல உறுதுணையாக செயல்பட வேண்டும்.

5. இயக்கத்தின் மாவட்ட தலைமை வழிகாட்டுதலுடன் களப்பணிகளிலும், மாதம் ஒருமுறையாவது தங்கள் பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கைப் பணிகளிலும் ஈடுபட வேண்டும்.

6. மாவட்டம்தோறும் மாவட்ட தலைவர் வழிகாட்டுதல்களுடன் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடத்தி, அந்தந்த பகுதிகளில் பொதுப் பிரச்சனைகள் மற்றும் பெண்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

7. இளைய தலைமுறையினர் மகளிர் அணியில் சேருவதற்காக சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். கல்லூரியில் முதுநிலை படிக்கும் மாணவிகளை இணைத்துக்கொண்டு உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்த வேண்டும்.

8. ஆண்டு தோறும் புதிய வாக்காளர் சேர்க்கை திருத்தம், மாற்றம் செய்வதற்கான முகாமை தேர்தல் ஆணையம் நடத்தி புதிய வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறது.

9. தங்கள் பகுதிக்குட்பட்ட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை விவரங்கள் மற்றும் புதிய பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை விவரங்களை மகளிர் அணியினர் சேகரித்து வைத்திருக்க வேண்டும்.

10. தங்கள் பகுதிக்குட்பட்ட ஊர்களைச் சேர்ந்த மாணவிகளோ, இளம்பெண்களே ஏதாவது ஒரு துறையில் சாதித்தால், அவர்களை வீடு தேடிச் சென்று சால்வை அணிவித்து பாராட்டி, வாழ்த்துவதை கடமையாக செய்ய வேண்டும்.

11.மாநில மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் மூலம் கிடைக்க வேண்டிய நிவாரணங்களை தங்கள் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

12.மகளிரணியில் வழக்கறிஞர்களாக இருப்பவர்கள், தங்கள் பகுதி சார்ந்த பெண்களுக்கு தேவைப்படும்போது சட்ட ஆலாசனைகளை வழங்கி அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும்.

13.மாவட்ட பொறுப்பிலும், தொகுதி பொறுப்பிலும் இருக்கும் மகளிர் அணியினர், தங்களது பகுதிக்குட்பட்ட நல்லது, துக்க நிகழ்வுகளில் பங்கேற்பது அவசியமானது. குறிப்பாக துக்க வீடுகளுக்கு சென்று அங்குள்ள பெண்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதை கடமையாக கருத வேண்டும்.

14. ஊடக விவாதம் மற்றும் ஊடகவியாளர் சந்திப்பை எதிர்கொண்டால், இயக்கத்தின் கொள்கை, கோட்பாடுகள் குறித்து தெளிவான. விளக்கங்களை அளிக்க வேண்டும்.

15. அச்சு ஊடகம், காட்சி ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களில் உள்ள அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கவனிப்பது மட்டுமின்றி, இயக்கத்தின் தொழில்நுட்ப அணியினருடன் தொடர்பு கொண்டு, மகளிர் அணியின் செயல்பாடுகள் பற்றி பகிர்வது முக்கியமானது.

15. பல்வேறு சமூக அமைப்புகளில் இயங்கிவரும் பெண் செயற்பாட்டாளர்கள் பற்றிய விவரங்களை அறிந்திருப்பது முக்கியமானது.

17. மகளிர் அணியினர் தங்களது பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினருடன் நல்ல தொடர்பை ஏற்படுத்தியிருப்பது அவசியம்.

18.அணியில் பொறுப்பில் இருப்பவர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் பொது செயல்பாடுகளில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

19. தங்களுக்குள் அலுவலக அடிப்படையில் இயங்குவதற்காக உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் கவனமுடன் உரையாட வேண்டும். பதிலுக்கு பதில் என்று வார்த்தைப் போரில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

20. குறைகள் மற்றும் இடையூறுகள், விரும்பத்தகாத செயல்பாடுகளை சந்திக்க நேர்ந்தால், தயக்கமின்றி மாவட்ட தலைமை மற்றும் மாநில தலைமையை தொடர்பு கொண்டு தீர்வுகாண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

விமர்சனம் : ஜவான்!

நடிகர் மாரிமுத்து உடல் தகனம்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0