“வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதுதான் நல்லது என தேர்தல் ஆணையத்தில் அதிமுக வலியுறுத்தியிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ தலைமையில் இன்று காலை (ஆகஸ்ட் 1) தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
திமுக ஆர்.எஸ்.பாரதி
வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை என்றார். மேலும், நாட்டில் 5 கோடி போலி ஆதார் அட்டைகள் இருப்பதாக மத்திய அமைச்சரே தெரிவித்துள்ளார். ஆதார் எண்ணை இணைக்கும் பட்சத்தில் வாக்காளர் பட்டியல் பிழையில்லாமல் இருக்க வேண்டும். எதை இணைத்தாலும் வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் இல்லாமல் பிழை இல்லாமல் வெளியிடப்பட வேண்டும்.
அதிமுக (இபிஎஸ்) ஜெயக்குமார்
வாக்களர் பட்டியலில் நடைபெறும் குளறுபடிக்கு ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம் முற்றுப்புள்ளி கிடைக்கும். எங்கிருந்தாலும் ஒரு ஓட்டு ஒருவருக்கே என்ற அடிப்படையில், எங்களுடைய கருத்துகள் குறித்து தேர்தல் ஆலோனைக் கூட்டத்தில் முன்வைத்தோம். ஆதார் அட்டையை இணைப்பதன் மூலமாகவோ அல்லது தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கும் 12 அடையாள அட்டைகளை இணைப்பதன் மூலமாகவோதான் வாக்களர் பட்டியலில் குளறுபடிகளை நீக்க முடியும்.
முழுமையாக போலி வாக்காளர்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்கேற்ற வகையில் 100 சதவிகிதம் தொழில்நுட்பத்தின்படி வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆதாரை இணைப்பதுதான் அதிமுகவின் கொள்கை. ஆதாரை இணைப்பது நல்லது. அப்படியில்லையெனில், 12 அடையாள அட்டைகளை இணைத்து வழங்குவதன் மூலம் எந்த குளறுபடியும் இருக்காது.
அதிமுக (ஓபிஎஸ்) கோவை செல்வராஜ்
ஆதார் பதிவு செய்யாவிட்டாலும் மற்ற 11 ஆவணங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும்
பா.ஜ.க கருநாகராஜன்
ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையுடன் இணைப்பதற்கான முயற்சிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சி வரவேற்கத்தக்கது.
இந்திய கம்யூனிஸ்ட்கட்சி ஆறுமுக நயினார்
வாக்காளர் அடையாள அட்டை ஆதார் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். ஏற்கனவே ஆதார் இல்லாதவர்கள் அரசின் சலுகைகளை பெறமுடியாத நிலை உள்ள நிலையில் இது தேவையற்ற நடவடிக்கை.
மார்க்சிஸ்ட் கட்சியும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தேமுதிக, பாமக, பகுஜன் சமாஜ், உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
–ஜெ.பிரகாஷ், கலை
அரசு பேருந்துகளில் முதல் பார்சல் சேவை தொடக்கம்!