காலை வெட்டிகொண்ட அதிமுக தொண்டர்: போன் போட்ட சசிகலா… நேரில் சந்தித்த எடப்பாடி
தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து பந்தயத்தில் தோற்றதால், காலை வெட்டிக்கொண்ட அதிமுக தொண்டர் செல்வக்குமாரை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. சில இடங்களில் 3வது மற்றும் 4வது இடங்களையும் பிடித்தது. சில இடங்களில் டெபாசிட்டையும் இழந்தது. இதனால் அதிமுகவினர் வருத்தமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவர் தனது காலை வெட்டிக்கொண்டார்.
காலை வெட்டிய அதிமுக தொண்டர்
தூத்துக்குடி மாவட்டம் திரவியபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 75). 1972ஆம் ஆண்டு திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்தபோது அவருடன் அதிமுகவில் சேர்ந்து சாதாரண தொண்டராக இருந்து வருகிறார்.
எம்.ஜி.ஆர். மீது தீவிர பற்றும், ஜெயலலிதா மீது தீவிர விசுவாசமும் கொண்டவர்.
இந்நிலையில், 18வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 30 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று செல்வக்குமார் அருகில் உள்ள ஒரு டீக்கடையில் பேசியிருக்கிறார்.
அப்போது அங்கு வந்த திமுக தொண்டர் ஒருவர் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது, இந்த தேர்தல் அதிமுகவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்று தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, அதிமுக 30 தொகுதிகளில் வெற்றி பெறுவது நிச்சயம் என்று செல்வகுமார் சொல்ல அதற்கு அந்த திமுக தொண்டர், வேண்டுமானால் பந்தயம் வைத்துக்கொள்வோமா என கேட்டுள்ளார்.
அதற்கு செல்வக்குமார், என்னிடம் பணம் எதுவும் இல்லை. நான் கிடைத்த வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளி. பணம் இல்லாமல் எந்த பந்தயம் என்றாலும் சரி என்று தெரிவித்துள்ளார்.
இதை கேட்ட திமுக தொண்டர், அதிமுக தோற்றுவிட்டால் உனது காலை வெட்டி கொள்வாயா என்று விளையாட்டாக கேட்டுள்ளார். செல்வக்குமார் சரி என்று சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அதிமுக தோல்வியடைந்ததை அடுத்து மனமுடைந்த செல்வகுமார் பந்தயத்தை நிறைவேற்றும் வகையில், வீட்டில் இருந்த அரிவாளை கொண்டு வலது காலை வெட்டிக்கொண்டார். இதனால் காயமடைந்த செல்வக்குமார் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அதிமுக தோல்வியடைந்ததால் தொண்டர் செல்வக்குமார் காலை வெட்டிய செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, செல்வக்குமாரை, தொலைப்பேசியில் அழைத்து பேசினார்.
அதில், “நிச்சயமாக ஜெயலலிதா அதிமுகவை பெரிய இடத்திற்கு கொண்டு சென்ற மாதிரி மீண்டும் அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமரும்… அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.
தொண்டர்கள் யாரும் இதுபோல் செய்யக்கூடாது. என்னை நம்புங்கள். நிச்சயமாக 2026ல் அதிமுக வெல்லும்.” என பேசி இருந்தார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது.
செல்வக்குமாரை நேரில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி
இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி நிர்வாகிகள் மூலம் செல்வகுமாரை சேலத்தில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்தார்.
செல்வக்குமாரை நேற்று (ஜூன் 9) நேரில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவருக்கு தேவையான நிதி உதவி வழங்கினார்.
மேலும் அவரிடம், “அதிமுக நிச்சயம் சோதனைகளில் இருந்து வெளிவரும். இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அண்ணாமலை கோவை தொகுதியில் தோல்வியடைந்ததால், தூத்துக்குடி மாவட்டம் முத்திரிதோப்பு பகுதியை சேர்ந்த பாஜக தொண்டர் ஜெயசங்கர் மொட்டையடித்தது, மீசையை மழித்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக முப்பெரும் விழா தேதி மாற்றம்: காரணம் செந்தில் பாலாஜி?
குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?