நிறுவன முத்திரையிடப்படாத பொருட்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டியைத் திரும்ப பெறவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்ட இனிப்பு கார வகைகள் தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்துகொண்டு பேசியபோது, “பெருவணிக நிறுவனங்கள் காரணமாக சாமானிய வியாபாரிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே சிறு வியாபாரிகள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ஒரு மாதத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி. வசூலிக்கப்பட்டால், வரி உயர்த்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது ரூ.1 லட்சத்து 65,000 கோடி வரை வசூலாகிறது. இந்தச் சூழ்நிலையிலும், அன்பிராண்டட் எனப்படும் நிறுவன முத்திரையிடப்படாத பொருட்களான பால், தயிர், அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பை மத்திய நிதியமைச்சர் உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இதேபோல் செஸ் வரி உயர்வையும் மாநில அரசு திரும்ப பெற வேண்டும். ஜிஎஸ்டியைத் திரும்ப பெறவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டம் சென்னையில் விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவித்து கொள்கிறோம். இதை பல கட்ட போராட்டங்களாக நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும், தமிழக நிதியமைச்சர், மத்திய நிதியமைச்சரையும் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்” என்றார்.
மேலும், “அரிசிக்கு வரி விதிக்கப்பட்டதை மாநில அரசு ஏற்றுக்கொள்ளாது என்ற நம்பிக்கை உள்ளது. பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் உணவு பொருட்கள் தொகுப்பில் உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை அளித்து விநியோகம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
எங்களது பேரமைப்பு சாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டது. நாங்கள் வணிகர்களின் நலனுக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் கூறி வருகிறோம். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
-ராஜ்