விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நிறைந்திருக்கும் தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் மற்றும் கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் நாளுக்கு நாள் வேலையிழந்து வருகிறார்கள். அவர்களின் மனநிலையை அறிந்து அந்த வாக்குகளைப் பெறுவதற்கு விதவிதமான பிரச்சாரங்களை செய்து வருகின்றனர் களத்தில் உள்ள வேட்பாளர்கள்.
காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் திமுக பலத்துடன் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். தொகுதியில் 3 முறை போட்டியிட்டு 2 முறை வெற்றி பெற்றவர் என்பது அவரது பலம். ஆனால் கடந்த தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாததுடன், தொகுதிப் பக்கமும் அவரது நடமாட்டம் அதிகமாக இல்லாததால் மக்களை சந்திப்பதில் தற்போது போராடி வருகிறார்.
பாஜக வேட்பாளர் ராதிகா சின்னத்திரை சித்தி அடையாளத்துடன் உங்கள் சித்தி வருகிறேன், எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று மக்களை சந்தித்து வருகிறார். மற்றபடி பாஜக, பாமக இரண்டு கட்சிகளுக்குமே தொகுதியில் கட்டமைப்பு இல்லாததால் பூத்களில் ஆளில்லாமல் அவஸ்தைப்பட்டு வருகிறார்.
தேமுதிக வேட்பாளர் விஜய் பிரபாகரனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து நாயக்கர் குடும்பத்தினர் மற்றும் தொழில் அதிபர்களை சந்தித்து வாக்குகளுடன் பொருளாதாரத்தையும் சேர்த்து சேகரித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் அதிமுகவின் பலத்துடன் நம்பிக்கையுடன் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். மாநிலம் முழுவதிலும் இருந்து வந்துள்ள பல தேமுதிக நிர்வாகிகள் ஊர் ஊராக தங்கி வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் 15,04,256 வாக்காளர்கள் உள்ளனர்.
திருப்பரங்குன்றம், திருமங்கலம் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் முக்குலத்தோர் வாக்குகள் கணிசமாக உள்ளது. சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் நாடார், நாயக்கர், பிள்ளை, யாதவர், செட்டியார், ரெட்டியார் மற்றும் தலித்துகள் வாக்குகள் உள்ளது.
தற்போது வேலை இல்லாத பிரச்சினை அதிகரித்து வருகிறது. காரணம் கருமருந்து பட்டாசுக்கு தடைவிதிக்கப்பட்டு பசுமை பட்டாசுக்கு அனுமதி வழங்கியதால் அதற்கு மாறுவதற்கு காலதாமதமாகிறது. இன்னொரு பக்கம் சைனா பட்டாசுகள் தாராளமாக இறக்குமதி செய்யப்படுகிறது. தீப்பெட்டி தொழிற்சாலைகளில் மெஷின்கள் இறக்குமதி செய்யப்பட்டதால் ஆட்குறைப்பு அதிகமாகிவிட்டது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். கைத்தறி நெசவு, விசைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் குடும்பங்கள் சுமார் 60 ஆயிரம் உள்ளது. அவர்களின் நிலையும் மோசமாக உள்ளது, அரசாங்கம் கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு ஆர்டர் கொடுக்காமல், வெளி மாநிலங்களில் கொள்முதல் செய்து பொங்கல் பண்டிகை காலங்களில் கொடுத்து வருகிறது. அதனால் தற்போது மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றார் அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொறுப்பாளர் அருப்புக்கோட்டை கண்ணன்.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளரும் சிட்டிங் எம்,பி-யுமான மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் விஜய் பிரபாகரன், பாஜக வேட்பாளராக நடிகையும் சரத்குமார் மனைவியுமான ராதிகா, நாம் தமிழர் கட்சியில் கௌசிக் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
முந்தைய தேர்தல்களில் கட்சிகள் பெற்ற வாக்கு விவரங்கள்
2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 4,70,883 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் அழகுசாமி 3,16,329 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அமமுக வேட்பாளர் 1,07,615 வாக்குகள் பெற்றார். மக்கள் நீதி மய்யம் 57,129 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 53,040 வாக்குகளும் பெற்றன.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 4,06,694 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக, மதிமுக, தேமுதிக, பாமக கூட்டணியில் வைகோ போட்டியிட்டு 2,61,143 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். திமுக 2,41,505 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தது. காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெறும் 38,482 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார்.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டு 3,07,187 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட், மதிமுக கூட்டணியில் வைகோ 2,91,423 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தேமுதிக 1,25,229 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தது.
கடந்த தேர்தல்களில் அதிமுக மற்றும் தேமுதிகவுக்கு அதிகமாக வாக்குகள் பதிவாகி உள்ளது. ஆனால் அதிமுகவில் பிளவுகள் ஏற்பட்ட பிறகு, அதிமுகவின் வாக்குகள் கொஞ்சம் குறைந்துள்ளது.
விருதுநகரில் தற்போதைய நிலவரப்படி கையும் முரசும் முட்டி மோதிக்கொண்டு வருகிறது.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நேரடியாக மோதுவது இந்நாள் முன்னாள்…நீலகிரியில் தகிக்கிறது அரசியல் அனல்!
மதுரை அதிமுக வேட்பாளர் சரவணன் மீது சட்ட நடவடிக்கை: எச்சரித்த சு.வெங்கடேசன்
காங்கிரஸுக்கு குட்பை: பாஜகவில் இணைந்தார் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்