பாவ, புண்ணிய வகுப்பு… ஆசிரியரிடம் ஆணவப் பேச்சு : அரசு பள்ளிகளில் என்ன நடக்கிறது?

அரசியல் தமிழகம்

சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்தப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை, அசோக் நகர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில், பரம்பொருள் அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் மகாவிஷ்ணு ஆன்மீக சொற்பொழிவு நடத்தியுள்ளார்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் அவர் பேசும்போது, “இறைவன் கருணையானவர் என்றால் எல்லோரையும் ஒரே மாதிரி படைக்க வேண்டும் தானே, ஏன் அப்படி படைக்கவில்லை…. ஏழை, பணக்காரன், நல்லவன், கெட்டவன், ரவுடி, ஹீரோ என ஒவ்வொருவரும் ஒரு விதமாக இருக்கின்றனர். ஏன் இந்த மாற்றங்கள். கடந்த ஜென்மத்தில் நீங்கள் என்ன செய்தீர்களோ அதை வைத்து இந்தப் பிறவியில் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட ஆசிரியர் ஒருவர்,

“இது ஆன்மீக சொற்பொழிவா… கர்மா பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்… என்ன நடக்கிறது” என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு மகாவிஷ்ணு, சார் உங்களுடைய பெயர் தெரிந்து கொள்ளலாமா… நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள்… நீங்கள் கேள்வி கேட்டால் நானும் கேட்பேன்…. உங்களுடைய பெயர் என்ன? நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும்…” என்று ஆசிரியரிடம் எகிறிக் கொண்டு செல்கிறார்.

அப்போது ஆசிரியர் இதெல்லாம் தப்பு என்று சொல்ல, “தப்புன்னு நீங்க எப்படி சொல்றீங்க… தப்புனா எதுக்கு என்ன பேச கூப்பிடுறீங்க… உங்களுக்கு என்ன பிரச்சனை… மறுபிறவி பற்றி எல்லாம் யார் சொல்லிக் கொடுப்பார்கள்” என்று ஆசிரியரிடம் கோபப்படுகிறார்.

இதற்கு ஆசிரியர்,  “அரசு பள்ளியில் ஆன்மீகம் பேசக்கூடாது” என்று சொல்ல மகாவிஷ்ணு,  “அப்படி யார் சொன்னது, சட்டத்தில் உள்ளதா… உங்களுடைய முதன்மை கல்வி அலுவலரைவிட நீங்கள் பெரியவரா?. பாவ புண்ணியத்தை பற்றி போதிக்கவில்லை என்றால் அவன் ஏகப்பட்ட பாவத்தை செய்வான்…” என்று ஆசிரியரிடம் கைநீட்டி திமிராக பேசுகிறார்.

அந்த ஆசிரியரை அருகில் இருக்கும் மற்ற ஆசிரியர்கள் சமாதானப்படுத்துகின்றனர்.
எனினும் விடாமல், ஆசிரியரிடம் திமிராக பேசும் மகா விஷ்ணு, “பாவ புண்ணியத்தை பற்றி பேசாமல் வேறு எதை பற்றி பேசுவது. ஆசிரியர் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசிவிடலாமா… உங்களுக்கு என்று ஒரு லிமிட் இருக்கிறது.

உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் என்னை அழைத்திருக்கக் கூடாது. என்னிடம் எதற்கு சண்டைக்கு வருகிறீர்கள். எல்லா ஞான நூல்களிலும் இருப்பதை பற்றி விளக்கம் கொடுக்கும் போது, அது குத்துகிறது என்றால் உங்களுக்கு ஈகோ பிரச்சினை. உங்களுக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது” என்று ஒரு அரசு பள்ளி ஆசிரியரிடமே கடுமையாக பேசுகிறார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோக, யோக தீட்சை தருகிறேன் என மாணவிகள் மத்தியில் உரையாற்றும் வீடியோவும் பரவி வருகிறது. அதில், மாணவிகள் அனைவரையும் கண்ணை மூட வைத்து பாடலை ஒலிக்க விட்டு அவர்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையிலான மகா விஷ்ணுவின் பேச்சில் மாணவிகள் பலர் உணர்ச்சி வசப்பட்டு அழுகின்றனர்.

இந்த நிலையில் அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவை ஆற்ற யார் அனுமதி கொடுத்தது, ஒரு ஆசிரியரிடம் இப்படியெல்லம் நடந்துகொள்ள இவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. என்று நெட்டிஷன்கள் கொந்தளித்துள்ளனர்.

மறுபிறவி பற்றி பேசுவது ஆன்மீகம் பற்றி பேசுவது பள்ளி மாணவர்கள் மத்தியில் மூடநம்பிக்கையை ஏற்படுத்தும் என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை டேக் செய்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்கூடத்தில் ஒரு குட்டிப் பைத்தியக்காரனைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது” என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், அன்பில் மகேஷை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

 

அதேசமயம் மகா விஷ்ணு, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ், தமிழ்நாடு பாட நூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் பரம்பொருள் அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் இந்த மகா விஷ்ணு. சிறு வயதில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக பங்கேற்றவர். தற்போது தனது பாதையை மாற்றி ஆன்மீக சொற்பொழிவு நடத்தி வருகிறார். இலங்கை, ஆஸ்திரேலியா என மற்ற நாடுகளுக்கும் சென்று ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அனைத்துலக முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு திமுகவின் கூட்டணி கட்சிகளே கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. அன்மையில் சில பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது சர்ச்சையாக வெடித்தது.

அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு, முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், விநாயகர் சதுர்த்தி உறுதிமொழி என இந்த வரிசையில் சென்னையில் உள்ள வித்யா மெட்ரிக் மேல்நிலையில் பள்ளியில் 104 ஆசிரியர்களுக்கு மாணவ மாணவிகள் பாத பூஜைகள் செய்துள்ளனர். ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு இவ்வாறு செய்திருக்கின்றனர்.

இந்நிலையில் தமிழக பள்ளிகளில் என்னதான் நடக்கிறது என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்த அனுமதி கொடுத்தது யார்?  என்று பள்ளிக் கல்வி துறை விசாரணையை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

அதுபோன்று அரசு அனுமதி இல்லாமல் அரசு பள்ளிகளில், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று  பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மதுமதி உத்தரவிட்டுள்ளார்.

தற்போது #Resign_AnbilMahesh  என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தியேட்டருல ஜாலி… ஆபிஸே காலி : அப்டேட் குமாரு

சுபமுகூர்த்தம் : பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவு!

கோட் முதல்நாள் வசூல் : கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த இந்தி!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம்? : கமிஷனர் அருண்

 

+1
0
+1
0
+1
1
+1
6
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *