33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் நடந்துகொண்டு இருக்கிறது. இந்தியா இதுவரை 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் வினேஷ் போகத், மகளிர் 50 பிரீஸ்டைல் மல்யுத்தப் பிரிவின் கால் இறுதியிலும் அரை இறுதியிலும் அபாரமாக விளையாடி, மல்யுத்த இறுதிச் சுற்றுக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையும் புரிந்தார்.
தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று நடக்கவிருந்த இறுதிச் சுற்றுக்கு முன் நடத்தப்பட்ட எடை பரிசோதனையில், 50 கிலோவை விட 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் மொத்த இந்தியா தேசமும் அதிர்ச்சியில் உறைந்தது. இது சம்பந்தமாக பிரதமர் மோடி, பாரீஸில் இருக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷாவிடம் பேசி, வினேஷ் போகத்துக்குத் தேவைப்பட்ட உதவியைச் செய்யச் சொன்னார்.
இது குறித்து மக்களவையில் நேற்று பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ”இந்த விவகாரம் குறித்து சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் இந்திய அரசாங்கம் புகார் அளித்துள்ளது” என்றார்.
மேலும் அவர், வினேஷ் போகத்திற்கு ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய அரசாங்கம் செலவழித்த பணத்தின் விவரங்களையும் மக்களவையில் பட்டியலிட்டார்.
அப்போது வினேஷ் போகத்திற்கு வழங்கப்பட்ட உதவிகளின் முழு விவரங்களைக் கேட்டதற்கு, விளையாட்டுத் துறை அமைச்சர் பதிலளிக்காததால், ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
இதற்கிடையே தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து விளையாட்டுக்கான நடுவர் நீதி மன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் இன்று அதிகாலையில் தனது எக்ஸ் தள பக்கத்தில், “அம்மா, மல்யுத்தம் என்னை வென்றுவிட்டது, நான் அதனிடம் தோற்றுவிட்டேன். நீங்கள் கண்ட கனவை உடைத்ததற்கு என்னை மன்னிக்கவும். இதற்கு மேல் என் உடம்பில் வலு இல்லை. குட் பை குஸ்தி 2001-2024. அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள்” என்று குறிப்பிட்டு, இனி விளையாடப் போவதில்லை என்று அறிவித்தார்.
இந்நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ”வினேஷ் போகத்தின் எடை 100 கிராம் கூடுதலாக இருந்ததற்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்கப்படவேண்டும்” என்று சொன்ன போது, சபாநாயகர் ஜக்தீப் தன்கர், ’இதை அரசியல் படுத்த வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர் “மொத்த தேசமும் இந்த நிகழ்வால் கவலையடைந்துள்ளது” என்று கூறினார்.
ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாத எதிர் கட்சியினர், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூச்சலிட்டனர். தொடர்ந்து திரிணாமூல் காங்கிரஸ் எம்பி டெரக் ஒ பிரியனைக் கத்த வேண்டாம் என்று தன்கர் எச்சரித்தார்.
இதனால், எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இதனை அடுத்து சபாநாயகர் தன்கரும் சிறிது நேரம் வெளிநடப்பு செய்தார். பின்பு கேள்வி நேரம் ஆரம்பிக்கும் பொழுதுதான் திரும்பி வந்தார்.
அப்போது “எதிர்க்கட்சியினரின் நடத்தை ஏற்கத்தக்கது அல்ல” என்று தனது வருத்தத்தை தெரிவித்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
Vinesh Phogat: வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் போகத் மேல்முறையீடு!
தள்ளிப்போகும் ‘இன்டர்ஸ்டெல்லார்’ ரீ-ரிலிஸ்!
“உங்கள் மதிப்பு வெற்றிகளால் அளவிடப்படுவதில்லை” : வினேஷ் போகத்துக்கு நயன்தாரா ஆலியா பட் ஆறுதல்!