ரயில்வே பதவி ராஜினாமா… காங்கிரஸ் கட்சியில் வினேஷ் போகத்

Published On:

| By Kumaresan M

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ரயில்வேயில் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடை பிரிவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோவை விட 100 கிராம் கூடுதலாக இருந்த காரணத்தினால் அவரால் இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. இதனால், நாடு முழுவதும் அவர் பாப்புலரானார். வினேஷ் போகத்தின் விளம்பர மதிப்பும் பல மடங்காக உயர்ந்தது.

பின்னர், பாரிசில் இருந்து நாடு திரும்பிய வினேஷ் போகத்துக்கு விமான நிலையத்தில் ஹரியானா மாநிலம் காங்கிரஸ் கட்சி சார்பாக பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போதே, காங்கிரஸ் கட்சியில் அவர் சேருவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில், கடந்த 4 ஆம் தேதி டெல்லி வந்த வினேஷ் போகத், ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். பின்னர், தனது ரயில்வே பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தையும் வினேஷ் போகத் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தன் பதிவில், ரயில்வேயில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என்றும் வினேஷ் கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து, டெல்லியிலுள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டுக்கு இன்று (செப்டம்பர் 6 ஆம் தேதி) சென்ற வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானார். அதே போல, மற்றொரு மல்யுத்த வீரரான பஜ்ரங் பூனியாவும் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

கட்சியில் சேர்ந்த வினேஷ், பஜ்ரங்  ஆகியோருக்கு ஹரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி சார்பில் வாய்ப்பு  வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெறுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

மதவாத வெறுப்புணர்வை மாணவர்களிடம் விதைக்க வேண்டாம்: திமுக மாணவரணி தீர்மானம்!

டிவி காமெடி முதல் பள்ளி டிராஜிடி வரை… யார் இந்த மோட்டிவேட்டர் மகா விஷ்ணு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share