ஒலிம்பிக் போட்டியில் மெடலை தவறவிட்ட வினேஷ் போகத் தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றுள்ளார்.
பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
முன்னாள் பாஜக எம்பியும், முன்னாள் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு (WFI) தலைவருமான பிரிஜ் பூஷன் சிங்கி மீது பாலியல் குற்றம்சாட்டி கடந்த ஆண்டு வினேஷ் போகத் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த ஆண்டு அவர் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது நாடு முழுவதும் பேசுபொருளானது.
இந்தநிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகத், நடந்து முடிந்த ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் ஜுலானா தொகுதியில் போட்டியிட்டார்.
2005 ஆம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதில்லை.
தற்போது வினேஷ் ஜுலானா தொகுதியில் களம் கண்ட நிலையில், இங்கு எம்.எல்.ஏ.வாக இருந்த ஜனநாயக் ஜனதா கட்சி வேட்பாளர் அமர்ஜித் தண்டா, பாஜக வேட்பாளர் யோகேஷ் குமார், ஆம் ஆத்மியின் கவிதா தலால் என கடுமையான போட்டி நிலவியது.
கவிதா தலாலும் முன்னாள் மல்யுத்த வீராங்கனை ஆவார். காங்கிரஸ் சார்பிலும் மல்யுத்த வீராங்கனை, ஆம் ஆத்மி சார்பிலும் மல்யுத்த வீராங்கனை களமிறக்கப்பட்டதால் அனைவரது பார்வையும் ஜூலானா தொகுதி பக்கம் திரும்பியது.
இன்று (அக்டோபர் 8) காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் வினேஷ் போகத்துக்கும், பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாருக்கும் இடையே மாறி மாறி கடுமையான போட்டி நிலவி வந்தது. 11 மணியளவில் வெறும் 38 வாக்குவித்தியாசத்தில் இருவருக்கும் இடையே போட்டி நிலவியது.
இந்நிலையில் வினேஷ் போகத் வெற்றி பெற்றார் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. களம் கண்ட முதல் தேர்தலிலேயே வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்.
65,080 வாக்குகள் பெற்று 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்துள்ளார். பாஜக வேட்பாளரான யோகேஷ் குமார் 59,065 வாக்குகள் பெற்றுள்ளார்.
இந்த வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். 2005 ஆம் ஆண்டுக்கு பிறகு வினேஷ் போகத் மூலம் ஜூலானா தொகுதியை காங்கிரஸ் பிடித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா