ஆ.ராசா, உதயநிதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வினித் ஜிண்டால் மனு தாக்கல் செய்துள்ளார்.
விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி சனாதனம் பற்றி பேசிய பேச்சு இன்று வரை பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது.
உதயநிதியை தொடர்ந்து திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவும் சனாதனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேசி வருகிறார்.
கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி புதுச்சேரியில் கலைஞர் நூற்றாண்டு சிலை திறப்பு விழாவில் பேசிய ஆ.ராசா,
“டெல்லியில் திறந்தவெளியில் போராட்டத்தை வைத்துக் கொள்ளலாம். ஒரு லட்சம் பேரை கூட்டுங்கள். சனாதனம் பற்றி நீங்களும் பேசுங்கள் நானும் பேசுகிறேன். சனாதனம் குறித்து மக்கள் தீர்மானிக்கட்டும்.
நீங்கள் உங்கள் வில்லு, அம்பு, கத்தி என எல்லாவற்றையும் கொண்டு வாருங்கள். நான் பெரியார் அம்பேத்கர் புத்தகத்தோடு வருகிறேன். விவாதிக்க தயார். உதயநிதி பேசியது மென்மையான பேச்சு” என்று கூறியிருந்தார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற குலக்கல்வித் திட்டத்தின் மறுவடிவமான விஸ்வகர்மா யோஜனா திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் ஆ.ராசா.
அப்போது, “மலேரியா, டெங்கு என சனாதனத்தை பற்றி உதயநிதி மென்மையாகத்தான் சொன்னார். இதை சமூகம் அறுவறுப்பாக பார்க்காது.
ஆனால் தொழுநோயை போல, எச்.ஐ.வி போல அவலம் நிறைந்த ஒரு நோயாகத்தான் சனாதனத்தை பார்க்க வேண்டும்” என்றார்.
இன்று நீலகிரியில் திமுக வாக்குச்சாவடிகள் நிலை முகவர்கள் கூட்டம் உதகையில் நடைபெற்றது. இதிலும் சனாதனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேசினார் ஆ.ராசா. அப்போது, “சனாதனம் எச்.ஐ.வி. தொழுநோய் போன்றது” என்றார்.
இந்தசூழலில் ஆ.ராசா மீது டெல்லி வழக்கறிஞர் வினித் ஜிண்டால் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தொழுநோய் மற்றும் எச்.ஐ.வி.யுடன் சனாதனத்தை ஒப்பிட்டு பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.
சனாதன தர்மத்தை அவமதித்ததாகவும், மதத்தின் அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும், மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் வினித் ஜிண்டால் புகார் அளித்துள்ளார்.
ஏற்கனவே உதயநிதி மீது டெல்லி போலீசில் புகார் அளித்திருந்தார். ஆனால் அதன்மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை.
இந்தசூழலில் உச்ச நீதிமன்றத்திலும் வினித் ஜிண்டால் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சனாதன தர்மத்துக்கு எதிராக எம்.பி.ஆ.ராசா, அமைச்சர் உதயநிதி ஆகியோர் வெறுப்பு பேச்சு பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காத டெல்லி மற்றும் சென்னை காவல் ஆணையர் மீது அவமதிப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
பிரியா
மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரயில் மறியல்!