விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொல்லாதது பாஜகவினரின் விமர்சனத்துக்கு உள்ளானது.
திமுக தலைவராக இல்லையென்றாலும், முதலமைச்சராக கருத்து சொல்லியிருக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியிருந்தார்.
ஸ்டாலின் மீது அண்ணாமலையும் விமர்சனங்களை முன்வைத்தார். இந்துக்களின் பண்டிகைக்கு மட்டும் திமுக இப்படி நடந்து கொள்வதாக விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை வாழ்த்து தெரிவித்திருந்தது.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் என அதிகாரப்பூர்வ பக்கத்தில் ட்வீட் செய்யப்பட்டிருந்தது. அத்துறையின் ஆணையர் பெயரில் இந்த வாழ்த்து வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கு திமுக எம்.பி செந்தில்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கலைஞர் சொன்ன வார்த்தைகளை குறிப்பிட்டு, இந்து சமய அறநிலையத்துறை அதை மீறி செயல்படுவதாக ட்வீட் செய்திருக்கிறார்.
அமைச்சர் சேகர்பாபுவை சீண்டும் வகையில் அவர் கருத்து தெரிவித்துள்ளதாக திமுகவினரே கூறி வருகின்றனர்.
“இந்துசமய அறநிலையத்துறை என்பது, அம்மதம் சார்ந்த சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாக அமைப்பு மட்டும்தான். கடவுள் வழிபாடு செய்வதோ, அச்சமய விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதோ அந்த துறையின் பணி அல்ல” – கலைஞர்.
சொன்னது கலைஞர் ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவரிடம்” என்று தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்பு ஒருமுறை கூட அரசு விழாவில் பூமி பூஜைகள் நடத்தப்படுவது தொடர்பாக இவர் தெரிவித்த கருத்துக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர்.
தருமபுரியில் ஏரி சீரமைக்கும் பணியை தொடங்குவதற்கு முன், பூமி பூஜை நடத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். ஒரு மதம் சார்ந்த பூமி பூஜையை அரசு நிகழ்ச்சிகளில் நடத்த அனுமதிக்க முடியாது என கண்டனம் தெரிவித்தார்.
இத்தகைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகளையும் அவர் கண்டித்திருந்தார். அப்போதும் இந்த கருத்து சர்ச்சையை சந்தித்தது. இந்து விரோத அரசியலை வன்மையாக கண்டிப்பதாக குரல் கொடுத்தது பாஜக.
தற்போது எம்.பி செந்தில்குமார் மீண்டும் இந்துமதம் தொடர்பாக கருத்து தெரிவித்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
–ஜெயப்ரியா
முதல்வர் வாழ்த்து சொல்லாதது மக்களை ஒதுக்கும் செயல் : அண்ணாமலை