கிராம உதவியாளர்கள் அதாவது தலையாரி பணி நியமனத்தில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கொடுத்த லிஸ்டில் உள்ளவர்களை நியமிக்காமல், மாவட்ட ஆட்சியர்களே அறிவித்துவிட்டார்கள் என்ற சர்ச்சை பொங்கலுக்கு முன்பே கிளம்பியது.
இதுகுறித்து மின்னம்பலத்தில், ஜனவரி 13 ஆம் தேதி, ’திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் தந்த பொங்கல் ஷாக் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
தென்காசி, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கிளம்பிய இந்த குமுறல் இப்போது தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது.
“தலையாரி பணிக்கு கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் எம். எல். ஏ. க்கள் மற்றும் அமைச்சர்களை காய்ச்சி எடுத்து வருகிறார்கள் திமுக நிர்வாகிகள். இதையடுத்து, ‘இது என்ன திமுக ஆட்சியா? அதிகாரிகளின் ஆட்சியா? இப்படி இருந்தால், வரும் தேர்தலில் எப்படி வாக்கு சேகரிக்க போவது?’ என்று மாவட்ட ஆட்சியர்களிடம் அமைச்சர்களே வாக்குவாதம் செய்து வருகின்றனர்.
கிராம உதவியாளர்கள் பணி நியமனத்தில் என்னதான் நடந்தது என்று விசாரணையில் இறங்கினோம்.
கடந்த டிசம்பரில் நடந்த கிராம உதவியாளர்கள் என்கிற தலையாரி வேலைக்கான தேர்வை போட்டிப் போட்டுக் கொண்டு பலரும் விண்ணப்பித்தனர். 2748 கிராம உதவியாளர்கள் காலியிட பணிக்கு 10.10.2021 முதல் 07.11.2021 வரையில் விண்ணப்பம் பெறப்பட்டது.
இந்த பணிக்கு சுமார் 4 லட்சம் பேர் விண்ணப்பத்திருந்தனர். , நேர்முகத் தேர்வில் சுமார் இரண்டரை லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
ஆட்சி அமைந்ததில் இருந்து கட்சியினருக்கு எதுவும் செய்யவில்லை என்ற குமுறல்கள் அதிகமானதால், தலையாரி பணியை கட்சியின் கிளைச் செயலாளர்களின் குடும்பத்தினர் உறவினர்களுக்கு வழங்க தலைமை முடிவெடுத்து, முதல்வர் அலுவலகத்தில் இருந்து இதுகுறித்த தகவல் அமைச்சர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே கிராம உதவியாளர்கள் பணிக்கு கால் ஃபார் செய்யப்பட்டதிலிருந்தே எம்.எல்.ஏ.க்கள் பணம் வசூலிப்பதாக மேலிடத்திற்கு தகவல்கள் சென்றது. முதல்வர் அலுவலக அறிவுறுத்தல்களை மீறி திமுக எம். எல். ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், மற்றும் அமைச்சர்கள் கட்சிக் காரர்களுக்கே வேலையைக் கொடுப்பதாக இருந்தாலும் சில லட்சங்களை பெற்றுக் கொண்டு மாவட்ட ஆட்சியர்களிடம் பட்டியல் கொடுத்தனர்.
இந்த நேரத்தில் முதல்வர் தனி செயலாளர் (1) உதயசந்திரன் அனைத்து கலெக்டர்களுக்கும் ஒரு வாய் மொழி உத்தரவு போட்டார்.
’அமைச்சர் கொடுக்கிறார், மாவட்ட செயலாளர்கள் கொடுக்கிறார்கள் என்று கண்களை மூடிக்கொண்டு தலையாரி பணி நியமனங்களை போட வேண்டாம், மெரிட்டில் போடுங்கள்’ என்பதுதான் உதயசந்திரனின் உத்தரவு.
அதைப் பயன்படுத்திக் கொண்டு பல மாவட்ட ஆட்சியர்கள், தாசில்தார்கள் உதவிகளுடன் பலமான வசூல் செய்து தலையாரி பணி நியமன ஆணைப் பட்டியலை வெளியிட்டுள்ளனர் என்று குமுறுகிறார்கள் திமுக தொண்டர்கள். ஒவ்வொரு மாவட்டமாக கலெக்டர்களின் பட்டியலைப் பார்த்து எம். எல். ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் அதிர்ந்துபோனார்கள். காரணம் அவர்கள் கொடுத்த பட்டியலில் ஓரிருவருக்கே பணிகள் வழங்கப்பட்டன.
இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியினர் மத்தியில் பிரளயம் ஏற்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் அமைச்சர் உதவியாளர்கள் அதிகமாக பணம் பெற்றுக்கொண்டு கொடுத்த சில போஸ்டிங்குகளையும் மாற்று கட்சியினருக்கு போட்டதால், கட்சி நிர்வாகிகள் அமைச்சர்களின் உதவியாளர்களைத் தொடர்புகொண்டு வார்த்தையால் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
இப்படி ஆகும் என்பதை எப்படியோ அறிந்து சில நிர்வாகிகள் அந்தந்த தாசில்தாரை போய் பார்த்தே பணி ஆணைகளை பெற்றுவிட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் நிர்வாகி ஒருவர், ‘அமைச்சர் சிபாரிசு செய்தும் என் பெயர் இறுதிப் பட்டியலில் இல்லை என தெரிகிறது. தாசில்தார் நேரடியாக பத்து லட்சம் பணம் கேட்கிறார், கொடுத்துவிட்டு வாங்கி விடவா’ என்று தனக்கு நெருக்கமான எம்.எல்.ஏ.விடம் கேட்டிருக்கிறார்.
அவரும் ஒ.கே. சொல்ல அப்போதே தாசில்தாரிடம் பத்து லட்சம் கொடுத்து விட்டு இப்போது தலையாரி ஆகிவிட்டார். அமைச்சர்களால் முடியாத நிலையிலும் தாசில்தார்களை பிடித்து காரியத்தை சாதித்துள்ளனர் பலர்.
மினிஸ்டர் பதவியை ரிசைன் பண்ணு
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் மருமகனும் உதவியாளருமான ரிஸ்வானைத் தொடர்பு கொண்டு, ஒலக்கூர் ஒன்றிய பொறியாளர் அணியின் துணை அமைப்பாளர் வேல்முருகன் பேசுகிறார். அந்த உரையாடல் இப்போது கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதோ அந்த உரையாடல்…
“ஹலோ ஹலோ, வணக்கம் அண்ணா…”
“வணக்கம் சொல்லுங்க”
“ஒலக்கூர் ஒன்றியம், அன்னைக்கு போன் பண்ணமே… பாலாஜி போன் பண்ணானே..”.
”என்ன விஷயம்?”
“அதான் ஜாப் விஷயம்… லிஸ்ட் ஒட்டிட்டாங்க வேறு பெயர் வந்துடுச்சு”
”கர்ணம்பூண்டியா! கர்ணம்பூண்டி என்ன பெயர் வந்திருக்கு?”
”சஞ்சவராயன்பேட்டை பேரு வந்திருக்குண்ணா”
”சரிங்க வையுங்க பேசறேன்”
“திண்டிவனம் சஞ்சவராயன்பேட்டையிலிருந்து வந்தாண்ணே இங்க ஒலக்கூர் ஒன்றியத்துல ஓட்டு கேட்க போறாங்க?
‘தாசில்தாரை போய் கேளுங்க…
‘தாசில்தாரா? நீங்கதான் 15 லட்சம் வாங்கிட்டு போட்டிருக்கீங்க.
’ஏன் 25 லட்சனும்ம்னு சொல்லுங்களேன்…தாசில்தாரை போய் கேளுங்க’
’அதிகாரம் உங்ககிட்ட இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணுவீங்களா? நாங்க தாசில்தாரை பார்த்துக்குறோம். நீங்க மினிஸ்டர் பதவியை ரிசைன் பண்ணுங்க. எங்க ஒன்றியத்துக்கு எதுக்கு அங்கேர்ந்து போட்டீங்க? கட்சிக்காக உழைச்சவன்லாம் பைத்தியக்காரனா? கொடி பிடிச்சவன்லாம் பைத்தியக்காரனா…?”
அப்படியே உரையாடல் கட் ஆகிறது.
எம்.பி. எலக்சன்ல மந்திரியெல்லாம் அசிங்கப்பட்டு நிக்கப் போறாங்க
அடுத்த ஆடியோ மயிலம் ஒன்றியம் வீடுர் கிளை செயலாளர் தமிழரசன், மாவட்ட பிரதிநிதி ஜெயராமனிடம் பேசுகிறார்.
”அண்ணே… எம்பி எலக்சன்ல மந்திரியெல்லாம் அசிங்கப்பட்டு போகப் போறானுக. கட்சிக்காரனுக்கு வேலை போட்டுக் கொடுத்தா நாளைக்கு கட்சிக்குதாங்க ஒட்டுப் போடுவான். அண்ணா திமுகவே பரவாயில்லைங்க. கட்சிக்காக கஸ்டப்பட்டு அடி உதை வாங்கிருக்கோம். முதல்ல எட்டு லட்சம் கேட்டாரு, அப்புறம் ஒரு லட்சம்னு 9 லட்சம் கொடுத்திருக்கேன். வட்டிக்கு வாங்கி கொடுத்திருக்கேன்.
என் வூட்லயா காய்க்குது பணம்? நான் ஜெயா டிவிக்கு பேட்டி கொடுக்கப் போறேன். நோட்டீஸ் அடிச்சு கொடுக்கப் போறேன். நம்ம கட்சிக்காரன்கிட்ட 9 லட்சம் வாங்கிட்டு, ஒண்ணுக்கு புண்ணியமில்லாத சிபிஐ காரனுக்கு போட்டிருக்கான். பணம் கொடுத்தவன் செத்துடுவேன்னு அழுவுறாண்ணே…ஒரு பையனை சாவடிக்கிறதுக்கா நாம கட்சியில இருக்குறோம்?” என்று கோபத்தில் கொந்தளிக்கிறார்.
இந்த ஆடியோக்கள் குறித்து அமைச்சர் மஸ்தானின் மருமகனும் உதவியாளருமான ரிஸ்வானிடம் நாம் தொடர்புகொண்டு கேட்டோம். “எல்லாம் மெரிட்லதான் போட்டிருக்காங்க” என்று முடித்துக் கொண்டார்.
திமுக கீழ் நிலை நிர்வாகிகளிடம் தலையாரி வேலை போட்டுத் தருகிறேன் என்று சொல்லி லட்சம் லட்சமாய் பண வசூலும் நடத்திவிட்டு வேலையும் வாங்கிக் கொடுக்காததால் அமைச்சர்கள் மீது ஆத்திரத்தில் இருக்கிறார்கள் தொண்டர்கள்.
–வணங்காமுடி
சென்னை தி.நகர்: இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!
வேலைவாய்ப்பு : தபால் துறையில் கொட்டி கிடக்கும் பணியிடங்கள்!