நூறாண்டு கனவான நந்தன் கால்வாய் திட்டம், அன்னியூரில் அரசு கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தனது கன்னிப்பேச்சில் எம்.எல்.ஏ. அன்னியூர் சிவா பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அன்னியூர் சிவா.
இந்த நிலையில் சட்டமன்ற கூட்டத் தொடரில் முதல்முறையாக பங்கேற்ற எம்.எல்.ஏ அன்னியூர் சிவா இன்று (டிசம்பர் 10) தனது கன்னிப்பேச்சில் விக்கிரவாண்டி தொகுதிக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
அவர், ”ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விக்கிரவாண்டி தொகுதி முழுவதுமாக பாதிக்கப்பட்டது. எனினும் உடனடியாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை அனுப்பி நிவாரணை பணிகளை மேற்கொள்ள செய்தார் முதல்வர் ஸ்டாலின்.
அவரால் தான் நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றி தர முடியும். இத்திட்டம் திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிகொண்டாபட்டில் தொடங்கி விழுப்புரம் மாவட்டம் பனமலை ஏரியில் முடிகிறது. இதன் நீளம் 37 கிலோ மீட்டர்.
சாத்தனூர் அணையிலிருந்து வரும் உபரி நீரை ஊட்டு கால்வாய் ஏற்படுத்தி நந்தன் கால்வாய் வழியாக 36 பாசன ஏரிகள் பயன்பெறும். இத்திட்டத்தின் நீர்ப்பிடிப்பு பகுதி 6500 ஏக்கர். இது தமிழ்நாட்டில் நீர் தரும் பல அணைக்கட்டுகளின் பரப்பளவை விட பெரியது.
விவசாயத்தை நம்பி மட்டுமே வாழும் விக்கிரவாண்டி, செஞ்சி, திருவண்ணாமலை, பெண்ணாத்தூர், விழுப்புரம், வானூர் ஆகிய 6 தொகுதிகளை சேர்ந்த பகுதிகளில் வாழும் விவசாயிகளின் வாழ்வதாரம் செழிக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூறாண்டு கோரிக்கையான நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றி தரவேண்டும் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், தமிழ்ச் சமுதாயத்திற்கு தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்த புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனுக்கு தமிழ்நாட்டில் ஒரு மணிமண்டபம் அமைத்துத் தர வேண்டும்.
அன்னியூரில் அரசு கலைக் கல்லூரி கட்டித் தர வேண்டும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக தனி கட்டடம் கட்டித் தர வேண்டும்.
கல்பட்டு, திருவாமாத்தூர் கிராமங்களில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். கக்கன் நகரில் புதிய சமுதாயக் கூடம் கட்டித்தர வேண்டும் ஆகிய பல்வேறு கோரிக்கைகளை திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவா தனது கன்னிப்பேச்சில் விடுத்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
’கடவுளே… அஜித்தே…’ கோஷம் : அஜித் கவலை!
டங்ஸ்டன் சுரங்கம் : திருமாவளவனிடம் உறுதியளித்த மத்திய அமைச்சர்