திமுகவின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளரும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான புகழேந்தி இன்று (ஏப்ரல் 6) காலமானார்.
சமீப காலமாக கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த புகழேந்தி, சென்னையில் ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தேர்தல் வந்த நிலையில், ‘நான் ஒரு மாவட்டச் செயலாளர், ஆஸ்பத்திரியிலேயே இருக்க முடியுமா?’ என தனது பணிகளை கவனிக்கும் பொருட்டு விழுப்புரம் திரும்பினார்.
விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் டாக்டர் ரவிக்குமாரின் வேட்பு மனு தாக்கலில் கலந்துகொண்டார். அப்போதே அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.
இடையிடையே மீண்டும் ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டே தேர்தல் பணிகளையும் மேற்கொண்டார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஏப்ரல் 5-ஆம் தேதி பங்கேற்ற விழுப்புரம் விக்கிரவாண்டி பிரச்சாரப் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளையும் கவனித்து வந்தார். நேற்று முதல்வர் வருவதற்கு முன்பாக பொதுக்கூட்ட மேடையின் அருகே அமைக்கப்பட்ட ஓய்வெடுக்கும் அறையில் அமர்ந்திருந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டு சரிந்தார் புகழேந்தி. உடன் இருந்த அமைச்சர் பொன்முடி, அவரது மகன் டாக்டர் கௌதமசிகாமணி உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.
கௌதமசிகாமாணி உடனடியாக புகழேந்தியை பரிசோதித்து ரத்த அழுத்தம், சுகர் போன்றவற்றை செக் செய்து, உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகழேந்தி, அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். ரத்தம் அதிக அளவு அவருக்கு வெளியேறிய நிலையில், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 6) காலை 6 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு புகழேந்தியின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்களில் கூறுகிறார்கள். கடைசி மூச்சிலும் கட்சிப் பணியாற்றி காலமாகிவிட்டார் புகழேந்தி.
-வேந்தன்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்