விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மருத்துவர் அபிநயா இன்று (ஜூன் 14) அறிவிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதில், திமுக சார்பில் வேட்பாளராக அன்னியூர் சிவா ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அவர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட தொடங்கியுள்ளார். ஆனால், தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக, பாமக-பாஜக கூட்டணி ஆகியவை இன்னமும் வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (ஜூன் 14) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பதிவிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், “வருகின்ற ஜூலை 10 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா (முதுகலை ஓமியோபதி மருத்துவம் B.H.M.S., MD) போட்டியிடவிருக்கிறார்.
கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருப்பத்தூர்: பள்ளிக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு!
2024 குரோதி வருட ஆனிமாத (15.6.2024-16.7.2024) நட்சத்திர பலன்கள்! அஸ்வினி முதல் ஆயில்யம் வரை