விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவுற்ற நிலையில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடாத நிலையில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணி சார்பில் பாமகவின் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிட்டனர்.
மும்முனை போட்டி நிலவிய விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தலைவர்களின் அனல்பறந்த பிரச்சாரங்கள் கடந்த 8ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
அதனையடுத்து இன்று (ஜூலை 10) காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்றது.
விக்கிரவாண்டியில் இன்று வெயில் வாட்டிய நிலையிலும் கடந்த தேர்தல்களை போலவே இத்தேர்தலிலும் வாக்காளர்கள் பெருமளவில் வந்து தங்கள் ஜனநாயக கடைமையை ஆற்றினர்.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த வாக்குச்சாவடிகளில் EVM எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
சில வாக்குச்சாவடிகளில் 6 மணிக்கு மேல் வந்தவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு, வரிசையில் நின்று வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி வாக்குப்பதிவு முழுமையாக நிறைவுற்ற நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.
அத்தொகுதியில் மொத்தம் 2,37,031 வாக்காளர்கள் உள்ள நிலையில், இடைத்தேர்தலில் ஆண்கள் 95,536, பெண்கள் 99,944 மாற்று பாலினத்தவர் 15 என மொத்தம் 1,95,495 பேர் வாக்களித்துள்ளனர்.
கடந்த 2021 சட்டமன்றத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 82.04 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்த நிலையில், நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தலில் அதைவிட 0.44 சதவீதம் கூடுதலாக 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது வாக்கு எண்ணும் மையத்திற்கு சீல் வைக்கப்பட்ட EVM எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் வரும் 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ரூ.6,778 கோடியில் மழைநீர் வடிகால் திட்டம்… நகரமயமாக்கலில் தமிழகம் முன்னிலை : நகராட்சி நிர்வாகத்துறை
கழிவுகளை எரிக்கும்போது பலி : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலம் !